Tamilசெய்திகள்

நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ் தனித் தீர்மானம்

நீட் (NEET) நுழைவுத் தேர்வை உடனடியாக ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார்.

தனது உரையில், “சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்குப் பதிலாக நீட் தேர்வு அதனை மேலும் அதிகரித்துள்ளதுடன், சமூக நீதியையும் சமவாய்ப்பையும் கடுமையாகப் பாதித்துள்ளது. இத்தேர்வு முறையால் தனியார் பயிற்சி மையங்களே அதிக பலன் பெறுகின்றனவே தவிர, கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களும் விவசாயிகள் பிள்ளைகளும் அதே அளவிலான பயிற்சியைப் பெற முடிவதில்லை. சமூக நீதியை அடிப்படையாகக் கொண்ட கல்வியை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு என்றும், 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலான சேர்க்கையே சமூகத்தில் பின்தங்கியவர்களுக்கும் மருத்துவக் கல்வி கிடைக்க வழிவகுத்தது என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும், நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தொடர் முறைகேடுகளால் மாணவர்கள் உயிரிழக்கும் சோகம் நடந்துள்ளதால் நாடு முழுவதும் உள்ள மாணவர்களின் நம்பிக்கையை இத்தேர்வு முறை முற்றிலுமாக இழந்துவிட்டது என்றும், எனவே நீட் தேர்வை முற்றிலும் அகற்றிவிட்டு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த ஒன்றிய அரசு வழிவகை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மாநில உரிமையையும் கூட்டாட்சித் தத்துவத்தையும் மதித்து, நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒலிக்கப்படும் இந்த ஒருமித்த குரலை ஒன்றிய அரசு உடனடியாக மதிக்க வேண்டும் என்றும் அவர் தனது உரையில் உறுதியாகக் கேட்டுக்கொண்டார்.