Tamilசெய்திகள்

பிரதமர் மோடியை அவுரங்கசீப்புடன் ஒப்பிட்டு பேசிய சஞ்சய் ராவத் எம்.பி! – பா.ஜ.க கண்டனம்

புனே நகரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி-யுமான சஞ்சய் ராவத் பிரதமர் மோடி குறித்து பேசிய பேச்சு சர்ச்சையாகியுள்ளது.

சஞ்சய் ராவத் எம்.பி பேசுகையில், “இந்தியா மாபெரும் தலைவர்களை உலகிற்கு தந்துள்ளது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடியின் குணாதிசயங்களை நாம் பார்க்கும் போது அது நமக்குள் ஒரு பயத்தை ஏற்படுத்துகிறது.

இந்திய அரசியல் வரலாற்றில் இது போன்ற ஒரு அகோரியை, இவ்வளவு இரக்கமற்ற ஒரு மனிதரை இதற்கு முன்பு யாரும் பார்த்ததில்லை. இவர் எங்கிருந்து வந்தார் ? முகலாய அரசர் அவுரங்கசீப் பிறந்த அதே மண்ணில் இருந்துதான் இவரும் வந்துள்ளார். அவுரங்கசீப் பிறந்தது குஜராத் மாநிலத்தில் தானே, அதே குஜராத் மண்ணில் இருந்துதான் மோடியும் வந்துள்ளார்.” என்று தெரிவித்தார்.

சஞ்சய் ராவத்தின் இந்த சர்ச்சை பேச்சுக்கு பா.ஜ.க தேசிய செய்தித் தொடர்பாளர்கல் பிரதீப் பண்டாரி மற்றும் ஷேஷாத் பூனவல்லா பதிலடி கொடுத்துள்ளனர். இது தொடர்பாக டெல்லியில் வீடியோ மூலம் அவர்கள் கொடுத்த பதிலடியில், “தேர்தல்கலில் தொடர்ந்து தோல்வியடைந்து வருவதால், எதிர்க்கட்சிகளின் விரக்தி தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

நாட்டின் பிரதமரையும், அவரது அரசியலமைப்பு பதவியையும் அவதிப்பதாக நினைத்துக் கொண்டு, அவுரங்கசீப் பிறந்த மண் என்று ஒட்டுமொத்த குஜராத் மாநில மக்களையும் சஞ்சய் ராவத் அவமதித்துள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.