தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்! – வெற்றியை நோக்கி விடியல் ராஜு
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் நடப்பாண்டு மே மாதம் நிறைவடைகிறது. இதனால் 2026 முதல் 2029 ஆம் ஆண்டு வரையிலான நிர்வாகிகளுக்கான தேர்தல் பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
நடைபெற உள்ள தேர்தலில் இப்போது துணைத்தலைவராக இருக்கும் ஜி.எம்.தமிழ்குமரன் தலைமையில் ஒரு அணியும், தலைவராக இருக்கும் முரளி ராமசாமி தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றனர். சுயேச்சையாக தலைவர் பதவிக்கு கடந்த முறை போட்டியிட்ட மன்னனும், பொருளாளர் பதவிக்கு விடியல் ராஜ், செயலாளர் பதவிக்கு கதிரேசன், துணை தலைவர் பதவிக்கு சதீஷ்குமார், நடிகர் உதயா, இணை செயலாளர் பதவிக்கு விஜயசேகரன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
இரண்டு அணிகளும் கரன்சி, அன்பளிப்புகள் என வாரி வழங்கி வாக்கு கேட்டு வரும் தேர்தல் களத்தில் சுயேச்சையாக போட்டியிடும் விடியல் ராஜு எந்தவித அன்பளிப்புகளும் கொடுக்காமல் தனது கடந்த கால செயல்பாடு, தேர்தல் களத்தில் களப்பணி, வாக்கு சேகரிக்கும் தனித்த அணுகுமுறையால் அணி சார்பில் பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் சுபாஷ் சந்திர போஸ், விஜயகுமார் இரண்டு வேட்பாளர்களுக்கும் கடுமையான போட்டியாளராக மாறியதுடன், வெற்றியை எட்டிப் பிடிக்கும் வேட்பாளராக விடியல் ராஜீ இருக்கிறார் என்கின்றனர் தயாரிப்பாளர்கள்.
சென்னை பூர்வ குடியான விடியல் ராஜு ‘ஆளு’ என்கிற தமிழ் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக, நடிகராக திரையுலகில் பிரவேசித்தவர். இந்த படத்திற்கு தமிழ்நாடு அரசின் சிறந்த திரைப்பட விருதும், அந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த வில்லன் நடிகர் விருதையும் பெற்றுள்ளார்.
திரைத்துறை சார்ந்தவர்களுக்கான வீட்டு வசதி வாரியத்தின் தலைவராக பணியாற்றி இன்று வரை வாரியம் முடங்கி விடாமல் இருக்க காரணமானவர் விடியல் ராஜு என்பதுடன், தயாரிப்பாளர்களுக்கு நெருக்கடி, பிரச்சினை என தகவல் கிடைத்தாலே அழையா விருந்தாளியாக ஆஜராகி விடுவார் விடியல் ராஜீ என்கின்றனர் தயாரிப்பாளர்கள்.

எந்த அணியிலும் இணையாமல் பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் விடியல் ராஜீ தேர்தல் தொடக்க காலத்தில் எந்த பின்புலமும் இல்லாத சாமான்யராக கருதப்பட்டார். தேர்தல் களத்தில் அவரது தொடர்ச்சியான செயல்பாடு, வாக்கு கேட்கும் பாணி காரணமாக பிரதான போட்டியாளராக மாறியுள்ளார்.
தமிழ் சினிமா தயாரிப்பாளர்களில் பெரும்பான்மையினராக இருப்பவர்கள் செட்டியார்கள். அதனாலேயே இராமநாராயணன், அவரை தொடர்ந்து முரளி ராமசாமிக்கு அசைக்க முடியாத வாக்கு வங்கி இருந்து வருகிறது. அதே போன்று கமீலா நாசருக்கு அவரது சிறுபான்மை சமூகத்தவர் வாக்குகள் அவருக்கு மட்டுமே கிடைக்கும் என்கிற சூழல் நிலவி வருகிறது. அதே போன்று கணிசமான வாக்குரிமையுள்ள நாயுடு சமூகத்தினர் விடியல் ராஜுக்கு வாக்களிக்க தீவிரமான ஏற்பாடுகளை கடந்த சில நாட்களாக செய்து வருவதாக கூறப்படுகிறது.
முரளி ராமசாமி, தமிழ்குமரன் அணியை விரும்பாதவர்கள் விரும்பக்கூடிய வேட்பாளராக விடியல் ராஜு இருப்பதால் அவரது வாக்கு சதவீதம் அதிகரித்து பொருளாளர் பதவிக்கான வேட்பாளர்களில் முதல் இடத்தை நோக்கி முன்னேறும் வெற்றி வேட்பாளராக விடியல் ராஜு இருக்கின்றார் என்கின்றனர் தேர்தல்கள நிலவரத்தை கவனித்து வரும் மூத்த தயாரிப்பாளர்கள்.
