Tamilசெய்திகள்

ஆவின் பால் பொருட்களின் உற்பத்தி குறைப்பு! – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான ஆவினில் பனீர், வெண்ணெய், பால் பவுடர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பால் பொருட்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ள ஆவின் பால் பொருட்களின் உற்பத்தி குறைக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.

ஆவின் நிறுவனம் சார்பில் 230-க்கும் மேற்பட்ட பால் சார்ந்த பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது பனீர், வெண்ணெய், பால் பவுடர், மில்க்ஷேக், சாக்லேட், குக்கீஸ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், ஆவின் நெய் உற்பத்தி மற்றும் விற்பனையும் குறைக்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்க முடியாமல் ஏமாற்றமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டில் ஆவின் நிறுவனத்தின் தினசரி பால் கொள்முதல் 41 லட்சம் லிட்டராக இருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 28 லட்சம் லிட்டராகக் குறைந்துள்ளது. பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.38-லிருந்து ரூ.44 ஆக உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, தினசரி கொள்முதல் 32 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது. பால் கொள்முதல் அதிகரித்துள்ள நிலையிலும், பால் சார்ந்த பொருட்களின் உற்பத்தி நிறுத்தப்படுவதற்கு நிதி நெருக்கடியும் நிர்வாகச் சிக்கல்களுமே காரணம் எனக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் தினமும் சுமார் 3.06 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படும் நிலையில், ஆவின் நிறுவனம் 32 லட்சம் லிட்டர் பாலை மட்டுமே கொள்முதல் செய்கிறது. ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதலை தினமும் ஒரு கோடி லிட்டராக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமுல் மற்றும் கர்நாடக அரசின் நந்தினி போன்ற கூட்டுறவு பால் நிறுவனங்களுக்கு இணையாக ஆவின் நிறுவனத்தையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல தமிழக அரசு உரிய திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.

ஆவின் நிறுவனத்தின் தற்போதைய நிதிநிலை, நிர்வாகச் செயல்பாடுகள் மற்றும் உற்பத்தி பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய வல்லுநர் குழுவை அமைக்க வேண்டும். மேலும், ஆவின் நிறுவனத்தின் வளர்ச்சியையும் லாபத்தையும் உறுதிப்படுத்துவதற்கான பரிந்துரைகளைப் பெற்று, அவற்றை அரசு செயல்படுத்த வேண்டும்.

பனீர், வெண்ணெய், நெய் உள்ளிட்ட அனைத்து வகையான பால் பொருட்களும் தடையின்றி உற்பத்தி செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

ஆவின் நிறுவனத்தின் உற்பத்தியைக் குறைப்பதற்குப் பதிலாக, அதன் செயல்திறனை மேம்படுத்தி, சந்தையில் போட்டியிடும் திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தனது கோரிக்கை.

இவ்வாறு அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.