மு.க.ஸ்டாலின் கழற்றி வைத்த செருப்பே தமிழகத்தை ஆள்கிறது – திண்டுக்கல் லியோனி தாக்கு
முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் குடும்பத் திருமண விழாவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி பேசுகையில், மு.க.ஸ்டாலின் கழற்றி வைத்த செருப்பே தமிழகத்தை ஆள்கிறது, என்று காட்டமாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசியவர், இராமபிரான் அயோத்தியை விட்டுப் பிரிந்திருந்தபோது அவரது பாதுகைகள் (செருப்பு) நாட்டை ஆண்டதாகக் கூறப்படும் புராணக் கதையைச் சுட்டிக்காட்டினார். அதேபோல, தமிழக மக்களுக்காக மு.க.ஸ்டாலின் நேரடியாகக் களத்தில் இல்லாவிட்டாலும், அவர் கொண்டு வந்து சேர்த்துள்ள மகளிர் உரிமைத்தொகை, பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டம் மற்றும் மெட்ரோ ரெயில் போன்ற மாபெரும் மக்கள் நலத் திட்டங்கள் மூலம் பொதுமக்களைக் காத்து வருவதாகக் குறிப்பிட்டார்.
மக்கள் இன்று மு.க.ஸ்டாலினை நினைத்துப்பார்த்தே அந்தத் திட்டங்களின் பலன்களை அனுபவித்து வருவதாகவும், மு.க.ஸ்டாலின் கழற்றி வைத்துவிட்டு சென்ற செருப்பே தற்போது தமிழகத்தை ஆண்டுக்கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டார்.
மேலும், ராமன் இல்லாத காலத்தில் பரதன் நாட்டை ஆள்வதாக நினைத்துக்கொண்டு பாதுகை ஆட்சி செய்தது போல, தற்போதைய ஆட்சி நீண்ட காலம் நீடிக்காது என்று அவர் தெரிவித்தார்.
பதினான்கு ஆண்டுகள் செருப்பு நாட்டை ஆண்டது போல இந்த ஆட்சி பதினான்கு வாரங்களோ அல்லது பதினான்கு மாதங்களோ மட்டுமே தாக்குப் பிடிக்கும் என்றும், விரைவில் இந்த ஆட்சிக்கு முடிவு கட்டி மீண்டும் உதயசூரியனை உதிக்கச் செய்வோம், என்று அவர் தெரிவித்தார்.
திண்டுக்கல் லியோனியின் இந்த சர்ச்சை பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
