தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத் திருவிழாவில் சிறப்புத் திருப்பலி: திரளானோர் பங்கேற்பு!
தூத்துக்குடி உலகப் புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தின் 444-வது ஆண்டுத் திருவிழா கடந்த ஜூலை 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் செபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர்வாதம் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பாகச் சிறப்புத் திருப்பலிகள் நடைபெற்று வருகின்றன.
நேற்று காலை 9:30 மணிக்கு வணிகப் பெருமக்களுக்கான சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, பகல் 11:00 மணிக்கு முதியோர்களுக்கான சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. பாதிரியார் மரிய அரசு தலைமையில் பாதிரியார்கள் ஜேம்ஸ் விக்டர், ரோஷன், சந்தீஸ்டன், தாமஸ், அந்தோணிபிச்சை ஆகியோர் இந்தத் திருப்பலியை நிறைவேற்றினர். இதில் திரளான முதியோர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்தனை செய்தனர்.
திருவிழாவின் முக்கியச் சிறப்பம்சமாக வருகிற ஆகஸ்ட் 5-ஆம் தேதி பனிமய மாதா தங்கச் சப்பர பவனி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி நகரின் முக்கிய வீதிகள் தோறும் வண்ண விளக்கு தோரணங்கள் கட்டப்பட்டு, அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆலயம் அமைந்துள்ள பகுதி முழுவதும் தற்போது விழாக் கோலம் பூண்டுள்ளது.
