Tamilசெய்திகள்

துத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து பெரிய ரக விமானங்களை இயக்க வேண்டும் – அனிதா ராதாகிருஷ்ணன் கோரிக்கை

தூத்துக்குடியிலிருந்து டெல்லி, மும்பைக்குப் பெரிய ரக விமானங்களை இயக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவுக்கு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் எம்.எல்.ஏ-வுமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு, தீப்பெட்டி உள்ளிட்ட பாரம்பரியத் தொழில்களுடன் பல்வேறு முன்னணி ஆலைகள் மற்றும் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

தற்போது மின்சாரக் கார் உற்பத்தித் தொழிற்சாலை, உடன்குடி அனல் மின் திட்டம், குலசேகரப்பட்டினம் இஸ்ரோ ஏவுதளம் போன்ற பிரம்மாண்டத் திட்டங்களால் பிராந்தியத்தின் தொழில் வளர்ச்சி மேலும் வேகமெடுத்துள்ளது. மேலும், புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

அண்டை மாவட்டங்களில் கூடங்குளம் அணுமின் நிலையம், மகேந்திரகிரி இஸ்ரோ மையம், விஜயநாராயணம் கடற்படைத் தளம் போன்ற முக்கிய மத்திய அரசு நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.

ஆண்டுக்கு 20 லட்சம் பயணிகளைக் கையாளும் திறன் கொண்ட புதிய முனையத்துடன் மேம்படுத்தப்பட்டுள்ள தூத்துக்குடி விமான நிலையத்தை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய தென் மாவட்டங்களைச் சேர்ந்த பயணிகள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது சென்னை மற்றும் பெங்களூருவுக்கு மட்டுமே சிறிய ரக விமானங்கள் இயக்கப்படுவதால், பயணிகளுக்கான விமானக் கட்டணம் மிக அதிகமாக உள்ளது.

தொழில் வளர்ச்சி மற்றும் பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு டெல்லி, கொல்கத்தாவுக்கு சென்னை வழியாகவும், மும்பைக்கு பெங்களூரு வழியாகவும், ஹைதராபாத்திற்கு: கோயம்புத்தூர் வழியாகவும், போயிங் ஏர்பஸ் போன்ற பெரிய ரக விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரிய ரக விமானங்கள் இயக்கப்படும் போது பயணிகளுக்கான கட்டணம் கணிசமாகக் குறையும் என்பதோடு, தென் தமிழகத்தின் விமானப் போக்குவரத்து வசதிகளும் பெருமளவில் மேம்படும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.