தமிழக அமைச்சரவை விரிவாக்கும் – புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றனர்
தமிழகத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று காலை விரிவாக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அமைச்சர்களின் புதிய இலாகாக்கள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட துறைகள் குறித்த அதிகாரப்பூர்வ விவரங்களைச் சென்னை லோக் பவன் (ஆளுநர் மாளிகை) விரிவான செய்திக்குறிப்பாக வெளியிட்டுள்ளது.
முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில், ஏற்கனவே அமைச்சர்களாகப் பொறுப்பு வகித்த சில மூத்த அமைச்சர்களின் துறைகளில் ஆளுநர் இராஜேந்திர அர்லேகர் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, நிதி அமைச்சராக இருந்த மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன், தற்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சராக மாற்றப்பட்டு, அவருக்கு வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம் மற்றும் சட்டப்பேரவை உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல், மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சராக இருக்கும் ஆர். நிர்மல்குமார் வசம் இருந்த சட்டப்பேரவை விவகாரங்கள் துறை செங்கோட்டையனுக்கு மாற்றப்பட்டு, நிர்மல்குமாரிடம் மின்சாரம், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் ஊழல் தடுப்பு உள்ளிட்ட பிற துறைகள் தொடர்ந்து நீடிக்கின்றன. முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பொது நிர்வாகம், உள்துறை, காவல்துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட முக்கியத் துறைகளைத் தன் வசம் வைத்துள்ளார்.
இன்று லோக் பவனில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் புதிதாகப் பதவியேற்ற 23 அமைச்சர்களுக்கான துறைகளும் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இப்பட்டியலில், பெண்களுக்கான முக்கியப் பிரதிநிதித்துவமாக எஸ். கமலிக்கு கால்நடை பராமரிப்புத் துறையும், சி. விஜயலட்சுமிக்கு பால்வள மேம்பாட்டுத் துறையும், கே. ஜெகதீஸ்வரிக்கு சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன. தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஸ்ரீநாத்திற்கு மீன்வளம் – மீனவர் நலத்துறை, மதன் ராஜாவுக்கு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) துறை, ஆர்.வி. ரஞ்சித்குமாருக்கு வனத்துறை, வினோத்திற்கு வேளாண்மை – உழவர் நலத்துறை, ராஜீவுக்கு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை, பி. ராஜ்குமாருக்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, வி. காந்திராஜுக்கு கூட்டுறவுத் துறை, எம். விஜய் பாலாஜிக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை, மற்றும் விக்னேஷ். K-விற்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
முக்கியத் தொகுதிகளிலிருந்து அமைச்சரவைக்கு வந்த புதிய அமைச்சர்களுக்குப் பாரம்பர்ய மற்றும் அதிநவீனத் துறைகள் முக்கியத்துவம் வாய்ந்த முறையில் பகிர்ந்து கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், பெரும் விவாதத்திற்குள்ளான ஸ்ரீரங்கம் தொகுதியின் எஸ். ரமேஷுக்கு இந்து சமய அறநிலையத் துறையும், பி. விஸ்வநாதனுக்கு உயர் கல்வித் துறையும், வேளச்சேரி எம்.எல்.ஏ குமார். R-விற்குப் புதிய தொழில்நுட்பத் தேவைகளுக்கேற்ப ‘செயற்கை நுண்ணறிவு’ (Artificial Intelligence), தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும், லோகேஷ் தமிழ்செல்வனுக்கு வணிகவரி மற்றும் பதிவுத் துறை, விஜய் தமிழன் பார்த்திபனுக்கு போக்குவரத்துத் துறை, ராஜேஷ் குமாருக்கு சுற்றுலாத் துறை, தென்னரசுக்கு வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை, வி. சம்பத் குமாருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, முகமது ஃபர்வாஸுக்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, டி. சரத்குமாருக்கு மனிதவள மேலாண்மைத் துறை மற்றும் என். மேரி வில்சனுக்கு மிக முக்கியப் பொறுப்பான நிதி, திட்டமிடல் மற்றும் வளர்ச்சித் துறை ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
