Tamilசினிமா

பாலியல் புகார் – வைரமுத்திவின் விளக்கத்திற்கு பதிலடி கொடுத்த சின்மயி

இந்தி பட உலகை அலற வைத்த பாலியல் புகார்கள் இப்போது தமிழ் திரையுலகையும் தாக்க ஆரம்பித்து உள்ளது. கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு சொல்லி உள்ளார். மணிரத்னம் இயக்கிய ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ பாடலை பாடி பிரபலமானவர் சின்மயி.

வாகை சூடவா படத்தில் பாடிய ‘சரசர சாரக்காற்று வீசும்போது சாரப்பார்த்து பேசும்போது’ பாடலும், சிவாஜி படத்தில் பாடிய ‘சஹானா சாரல் வீசுதோ’, ‘கிளிமஞ்சரோ’ பாடல்களும் அவருக்கு புகழை தேடித்தந்தன. மேலும் பல படங்களில் ஏ.ஆர்.ரகுமான் போன்ற பிரபல இசையமைப்பாளர்கள் இசையில் ஏராளமான பாடல்களை பாடி இருக்கிறார்.

இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து சில பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சின்மயி அவரது டுவிட்டரில் பதிவிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார். இதுகுறித்து ஆங்கில தொலைக்காட்சிக்கு நேற்று அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

“எனக்கு வைரமுத்துவால் பாலியல் தொல்லை ஏற்பட்டது. சுவிட்சர்லாந்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது இதை அனுபவித்தேன். என்னை அவர் தங்கி இருந்த ஓட்டல் அறைக்கு அழைத்தார். நான் மறுத்துவிட்டேன். இதனால் எனக்கு பயம் வந்தது. அவரது அலுவலகத்திலும் இரண்டு பெண்களை முத்தமிட முயற்சித்தார்.

என்னைப்போல் பாதிக்கப்பட்ட பாடகிகள் இனிமேல் இதுகுறித்து பேசுவார்கள் என்று நம்புகிறேன். வைரமுத்துவின் அதிகார பலத்தால் வெளியே பேச தயங்குகிறார்கள். ஆனால் இது சரியான நேரம். எனவே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பலரும் இதுகுறித்து பேச வேண்டும்.

விளம்பரத்துக்காக இந்த குற்றச்சாட்டை நான் சொல்லவில்லை. எனக்கு இனிமேல் பாடுவதற்கு வாய்ப்பு கிடைக்குமா? என்று தெரியவில்லை. அரசியல் ரீதியாகவும் அழுத்தம் வரலாம். ஆனாலும் இதை யாராவது பேசத்தான் வேண்டும்.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து கவிஞர் வைரமுத்து நேற்று டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

“அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன். அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை. உண்மையைக் காலம் சொல்லும்.”

இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.

வைரமுத்து விளக்கத்தை பார்த்த பாடகி சின்மயி, அவர் ‘பொய்யர்’ என்று பதில் கருத்தை பதிவிட்டார்.

இந்நிலையில், பாடகி சின்மயி தாய் பத்மாஷினி கூறியதாவது:

“சின்மயிக்கு, வைரமுத்து பாலியல் தொல்லை தர முற்படுவதை முதலில் அறிந்ததே நான் தான். ஒரு சினிமா பாடல் வெளியீட்டு விழாவுக்காக, கடந்த 2004-ம் ஆண்டு சுவிட்சர்லாந்து சென்றோம். கச்சேரி முடிந்த பிறகு, எல்லோரையும் அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டு, என்னையும், என் மகள் சின்மயியையும் மட்டும் தங்க சொன்னார்கள். அங்கே வைரமுத்து இருப்பது தெரியாது.

இந்தநிலையில் பயண ஏற்பாட்டாளர் என்னிடம் வந்து ‘அம்மா நீங்கள் இங்கேயே காத்திருங்கள். சின்மயிக்காக வைரமுத்து ஓட்டலில் காத்திருக்கிறார், வர சொல்லுங்கள்’, என்றார். ‘ஓட்டலுக்கு எதுக்காக சின்மயி தனியாக போகவேண்டும்? எந்த தொழில்முறை பேச்சுவார்த்தையாக இருந்தாலும் ஊருக்கு சென்றதும் வைத்துக்கொள்ளலாமே? எதற்காக இந்த ரகசிய சந்திப்பு?’, என்று கேட்டேன்.

அதற்கு அந்த நபர் ‘வைரமுத்துவுடன் கொஞ்சம் ஒத்துழையுங்கள்’, என்று வெளிப்படையாக கூறினார். ‘அதற்கு வேறு ஆளை பாருப்பா…’, என்று உறுதியாக கூறி, அங்கிருந்து புறப்பட்டு விட்டோம். இதற்காக சட்ட நடவடிக்கைக்கு செல்லவில்லை.

மீ டூ இயக்கத்துக்கு சின்மயி ஆதரவாக இருக்கிறார். இது பெரிய இயக்கமாக மாற வேண்டும். இப்போது எல்லோரும் இதுகுறித்து பேச ஆரம்பித்து உள்ளனர். சீரழிவு ஏற்படுத்தும் இந்த சமூகத்துக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.”

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *