விஸ்வாசம்- திரைப்பட விமர்சனம்
இயக்குநர் சிவா – அஜித் வெற்றிக் கூட்டணியில் நான்காவது படமாக வெளியாகியிருக்கும் இந்த ‘விஸ்வாசம்’ எப்படி என்பதை பார்ப்போம்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அஜித் அரிசி மில் வைத்திருப்பதோடு, எதிரிகளே எழுந்து நின்று மரியாதை கொடுக்கும் அளவுக்கு ஊரில் பெரிய மனிதராக வலம் வருபவர், தனது மனைவி நயந்தாராவையும், மகள் அனிகாவையும் பிரிந்து வாழ்ந்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஊர் திருவிழாவில் அனைவரும் தங்களது குடும்பத்தோடு கலந்துக்கொள்ள அஜித் மட்டும் தனி ஆளாக ஒதுங்கி நிற்கிறார். இதனை பார்க்கும் அவரது சொந்த பந்தங்கள், மீண்டும் அஜித் மனைவியுடன் சேர வேண்டும் என்று நினைக்க, அவர்களது பேச்சைக்கேட்டு தனது மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வர அஜித் மும்பை செல்கிறார்.
மும்பையில் பெரிய நிறுவனத்தின் முதலாளியாக இருக்கும் நயந்தாரா அஜித்தை பார்க்க விரும்பாத நிலையில், அவரது மகள் அனிகாவை கொலை செய்ய ஒரு கூட்டம் துரத்துகிறது. அதில் இருந்து அனிகாவை காப்பாற்றும் அஜித், தனது மகளை கொலை செய்ய முயற்சிக்கும் எதிரி யார், அவர் எதற்காக கொலை செய்ய நினைக்கிறார், என்பதை கண்டுபிடிப்பதோடு, அந்த எதிரியிடம் இருந்து தனது மகளை காப்பாற்றுபவர், மீண்டும் தனது மனைவியுடன் ஒன்று சேர்ந்தாரா இல்லையா, என்பது தான் ‘விஸ்வாசம்’ படத்தின் கதை.
தேனி மாவட்ட வட்டார மொழியை சரளமாக பேசும் அஜித், தூக்குதுரைக்கு பங்காளியாக வரும் ரோபோ ஷங்கர், மாமனாக வரும் தம்பி ராமையா, மற்றும் கொடுவிலார்பட்டி கிராம தலையாரியாக வரும் யோகிபாபு, என்று கலகலப்பாக தொடங்குகிறது படம்.
முதல் பாதி முழுவதும் தூக்குதுறையின் அலப்பறைகள், கேலி கூத்துகள், அதிரடி என்று ரசிகர்களுக்கான விருந்தாக செல்லும் படம், இரண்டாம் பாதியில் தந்தை-மகள் பாசம் மற்றும் கணவன்-மனைவி கோபம் என்று குடும்ப படமாக உருவெடுக்கிறது. கிராமத்தில் கட்டுக்கடங்காத காளையாக வாழும் தூக்குதுரை, கணவனாகும் போது காதலோடும், தந்தையான பின்பு பாசத்தோடும் நடிப்பில் நவரசங்களை காட்டியுள்ளார்.
படத்தின் ஆரம்பத்தில் அஜித்தின் கூட்டாளிகளை அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களை வைத்து அறிமுகப்படுத்தும் விதம், வில்லன்களே அஜித்தை கண்டதும் தானாக எழுந்து நின்று வணங்கும் காட்சி, அஜித் நயன்தாராவை மாற்றி மாற்றி மாட்டிவிடும் கிராமத்து குழந்தைகள் என்று காட்சிக்கு காட்சி ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.
மகளை கொல்ல கூலிப்படை துரத்தி செல்லும் செய்தியை கேட்டு அங்கு செல்லும் அஜித், அவர்களை அடித்து நொறுக்கும் போது, அஜித்தை யாரோ ஒருவராக எண்ணி நயன்தாராவிடம் மகள் விவரிக்கும் காட்சி உணர்ச்சிபொங்க வைக்கிறது. அதே போல், கிளைமாக்ஸ் காட்சியில் மகள், தந்தையை முதன்முதலாக ‘அப்பா’ என்று அழைக்கும் போது ‘என் குலசாமி’ என்று அஜித் மண்டியிட்டு நெகிழும் காட்சியில் களங்காதோர் இலர்.
இதுபோக, நடிகர் விவேக் நயன்தாராவிடம் அஜித் மற்றும் மகளை மாட்டிவிடுவதும், கோவை சரளா அவர்களை காப்பாற்ற போராடுவதும் திரையரங்கத்தை சிரிப்பொலியால் அதிர வைக்கிறது. இம்மான் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு தேவையான அளவில் அமைந்து ரசிக்க வைக்கிறது. வெற்றியின் ஒளிப்பதிவு தேனி மாவட்ட கிராமத்து அழகை அசலாக பதிவு செய்துள்ளது.
துளியும் ஆபாசமற்ற, சிகரெட் மதுஅருந்தும் காட்சிகள் இல்லாத, முக்கியமாக அரசியல் வசனங்கள் எதுவும் இல்லாத இந்த படத்தில் மக்களுக்கு தேவையான ஹெல்மெட் அணிவது, சீட் பெல்ட் அணிவது என்ற நல்ல கருத்துக்களை மட்டும் எடுத்துரைத்து, இறுதியில் இக்கால பெற்றோர்களுக்கு தேவையான முக்கியமான மெசேஜ் சொல்லி படத்தை முடித்து வைத்துள்ளனர்.
மொத்தத்தில், தமிழர் திருநாள் அன்று குடும்பமாக சென்று ரசித்து காணும்படி ஒரு தரமான படத்தினை சிவா மற்றும் அவரது குழு, அஜித் என்கிற நல்ல நடிகரை வைத்து விருந்தளித்துள்ளனர்.