நியாயமான முறையில் போட்டியிட அம்பானி அனுமதிப்பாரா? – இலான் மஸ்க் கேள்வி
டெஸ்லா மற்றும் ‘எக்ஸ்’ நிறுவனத் தலைவரான இலான் மஸ்க், ரிலையன்ஸ் ஆதரவு பெற்ற நிறுவனங்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு வழங்கி வரும் நிதி நன்கொடைகள் குறித்த செய்தி அறிக்கைகளைப் பகிர்ந்து மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்;
தனது ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவையை இந்தியாவில் தொடங்குவதைத் தடுத்து நிறுத்தித் தனது ஏகபோக உரிமையைப் பாதுகாக்க தொழிலதிபர் முகேஷ் அம்பானி முயல்வதாகக் குற்றம் சாட்டிய மஸ்க், அவரை கிண்டலாக ‘பிரதமர் அம்பானி’ என்று சாடிய சில மணி நேரங்களிலேயே இந்தச் செய்திகளைப் பகிர்ந்துள்ளார்.
இந்தியாவில் தனது செயற்கைக்கோள் இணையச் சேவை நியாயமான முறையில் போட்டியிட அம்பானி அனுமதிப்பாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ள மஸ்க், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு எதிரான தனது காரசாரமான பிரச்சாரத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளார்.
இருப்பினும், இந்திய வான்வழித் தகவல் தொடர்புத் துறையில் எவ்வித ஏகபோக உரிமைகளுக்கும் அனுமதி இல்லை எனவும், அனைத்துப் பாதுகாப்பு விதிமுறைகளையும் பூர்த்தி செய்யும் நிறுவனங்களுக்கு முறையான அனுமதி அளிக்கப்பட்டு வருவதாகவும் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெளிவுபடுத்தியுள்ளார்.
