Tamilசெய்திகள்

காங்கிரஸுடன் திரிணாமுல் காங்கிரஸ் இணைப்பா ? – ஜெய்ராம் ரமேஷ் விளக்கம்

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் தோல்வியை தழுவிய பின் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிளவுபட்டு வருகிறது. அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் ஒரு அணியாக பிரிந்துள்ள நிலையில், எம்.பி-க்களும் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க-வில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸை அழிவில் இருந்து காக்க, அக்கட்சியை காங்கிரஸ் உடன் இணைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் பரவின. டெல்லியில் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தியை, மம்தா பானர்ஜி நேரில் சந்தித்துப் பேசியதை தொடர்ந்து இரு கட்சிகளும் இணையப் போவதாக ஊடகங்களில் செய்திகள் பரவின.

ஆனால், இதை காங்கிரஸ் மறுத்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், “சோனியா காந்தி – மம்தா பானர்ஜி இடையிலான சந்திப்பு முற்றிலும் தனிப்பட்ட மற்றும் நட்பு ரீதியிலானது. இரு கட்சிகளின் இணைப்பு குறித்து எந்தவொரு திட்டமும் பரிசீலனையில் இல்லை. பரப்பப்படும் செய்திகள் யாவும் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை.” என்று தெரிவித்துள்ளார்.