சென்னையில் ‘ஐஎம்இசிஇ இந்தியா 2026’ (IMECE India 2026) சர்வதேச மாநாட்டை நடத்துகிறது ஏஎஸ்எம்இ (ASME) இந்தியா
மனிதகுலத்தின் நல்வாழ்விற்காக பொறியியல் துறையை முன்னெடுக்கும் முன்னணி தொழில்முறை அமைப்பான அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் மெக்கானிக்கல் இன்ஜினியர்ஸ் (ASME) இந்தியா, தனது முதன்மையான ‘சர்வதேச
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாநாடு மற்றும் கண்காட்சி’-யின் (IMECE India 2026) இரண்டாவது பதிப்பை சென்னை வர்த்தக மையத்தில் (Chennai Trade Centre) இன்று தொடங்கியது.
“நிலையான எதிர்காலத்திற்கான பொறியியல்” (Engineering a Sustainable Future) என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த மூன்று நாள் மாநாடு, இந்தியாவின் அடுத்தகட்ட தொழில் துறை வளர்ச்சியை ஆதரிக்கத் தேவையான தொழில்நுட்பங்கள், கூட்டாண்மைகள் மற்றும் திறமைகளை விவாதிக்க கொள்கை வகுப்பாளர்கள், தொழில் துறை தலைவர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSMEs), புத்தொழில் நிறுவனங்கள் (Startups) மற்றும் மாணவர்களை ஒரே தளத்தில் ஒன்றிணைக்கிறது.
இம்மாநாட்டில் 3,000-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், 600-க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள், 900- க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், 12 தொழில்நுட்ப அமர்வுகள் மற்றும் 75-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐஎம்இசிஇ (IMECE) மாநாடு மீண்டும் இந்தியாவில் நடத்தப்படுவது, உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொறியியல் மற்றும் உற்பத்திப் பொருளாதாரங்களில் ஒன்றான இந்தியாவின் மீதான ஏஎஸ்எம்இ-யின் நீண்டகால அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. தனது தொடக்கப் பதிப்பின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, ‘ஐஎம்இசிஇ இந்தியா 2026' மேம்பட்ட உற்பத்தி, எரிசக்தி, இயக்கம் (Mobility) மற்றும் டிஜிட்டல் உருமாற்றம் ஆகியவற்றில் இந்தியாவின் தொழில் துறை இலக்குகளுடன் உலகளாவிய நிபுணத்துவத்தை இணைக்கும் பாலமாகச் செயல்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் பேசிய மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கூறியதாவது, “நிலைத்தன்மை என்பது நமது இலக்காக இருக்க வேண்டும். எதற்காக? மனிதகுலத்தின் நலனுக்காகவே. நாம் செய்யும் ஒவ்வொரு செயல்பாடும், ஒவ்வொரு முயற்சியும் சக மனிதர்களுக்கானதே தவிர, எனக்கானது அல்ல. இது எனது ஆய்வகச் சுவர்களுக்கு வெளியே உள்ள மக்களுக்கானது. தங்கள் முன்னேற்றத்திற்காக இந்தக் குறிப்பிட்ட அறிவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மக்களுக்கானது. இந்த நோக்கத்திற்காகவே, மனிதகுலத்தின் நலன் கருதி விவாதிக்க நாம் இங்கு கூடியுள்ளோம். ஒரு சிறந்த தொலைநோக்குச் சிந்தனையாளராக இருப்பதற்கும் அல்லது இந்தச் சிந்தனையை நிறைவேற்றுவதற்கும், நாம் அனைவரும் 'ஆத்மநிர்பார்' (தற்சார்பு) இலக்கை நோக்கிச் செயல்பட வேண்டும். நமது இலக்குகள், நமது நோக்கங்கள், நமது முயற்சிகள் மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் தற்சார்பை நோக்கியே அமைய வேண்டும்.”
தொடக்க விழாவில் பேசிய ஏஎஸ்எம்இ-யின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான (CEO) தாமஸ் கோஸ்டாபில் கூறியதாவது: “ஏஎஸ்எம்இ முதன்முதலில் ஐஎம்இசிஇ மாநாட்டை இந்தியாவிற்கு கொண்டு வந்தபோது, உலகளாவிய பொறியியலின் எதிர்காலத்தில் இந்தியா ஒரு தீர்க்கமான பங்கை வகிக்கும் என்ற எங்கள் நம்பிக்கையைப் பிரதிபலித்தது. தொழில் துறை, கல்வித்துறை, கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பொறியியல் சமூகத்தினரிடமிருந்து கிடைத்த மகத்தான வரவேற்பு அந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியது. இன்று, மேம்பட்ட உற்பத்தி, எரிசக்தி, இயக்கம் மற்றும் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளுக்கான மிக முக்கியமான மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது. ஐமெக் இந்தியாவின் இரண்டாவது பதிப்பு அந்த வேகத்தை முன்னெடுத்துச் செல்வதுடன், உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த தொழில் துறை சவால்களுக்குத் தீர்வு காண உலகளாவிய நிபுணத்துவமும் இந்தியக் கண்டுபிடிப்புகளும் ஒன்றிணையும் சிறந்த தளத்தை வழங்குகிறது” என்று குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு மாநாட்டின் உத்திசார் முக்கியக் களங்களை எடுத்துரைத்து, ஏஎஸ்எம்இ-யின் தலைமை உத்திசார் அதிகாரி (CSO) ஆனந்த் சேதுபதி பேசுகையில்: “ஐஎம்இசிஇ இந்தியா 2026 மாநாட்டில் முன்னிலைப்படுத்தப்படும் துறைகள், இந்தியாவின் தொழில் துறை எதிர்காலத்தை வடிவமைக்கும் மிக முக்கியமான வாய்ப்புகளைப் பிரதிபலிக்கின்றன. அணுசக்தி மற்றும் ஆழ்கடல் தொழில்நுட்பங்கள் முதல் விண்வெளி, பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பொறியியல் வரை, இந்தத் துறைகளில் பொறியியல் சிறப்பானது நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்பத் தலைமை மற்றும் தேசிய போட்டித்தன்மையை நேரடியாக உயர்த்தும். இந்த வாய்ப்புகளை தொழில் துறை வெற்றிகளாக மாற்றுவதற்குத் தேவையான திறன்கள்,
கூட்டாண்மைகள் மற்றும் பணியாளர் தயார்நிலை ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில் எங்கள் பொது விவாத அமர்வுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன” என்றார்.
நீண்டகால பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்நுட்பத் தலைமையை வழிநடத்தும் என எதிர்பார்க்கப்படும் துறைகளில் இந்தியாவின் தொழில் திறன்களை வலுப்படுத்துவதே இம்மாநாட்டின் முக்கிய நோக்கமாகும். மூன்று நாள் நிகழ்வின் போது நடைபெறும் விவாதங்கள் அணுசக்தி உற்பத்தி, நீலப் பொருளாதாரம் (Blue Economy), விண்வெளி மற்றும் பாதுகாப்பு, மற்றும் டிஜிட்டல் பொறியியல் ஆகியவற்றில் உள்ள வாய்ப்புகளை விரிவாக ஆராய்வதுடன், இந்திய தொழில் துறை எவ்வாறு மீள்தன்மையை உருவாக்கலாம், கண்டுபிடிப்புகளை விரிவுபடுத்தலாம் மற்றும் உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளில் தனது நிலையை வலுப்படுத்தலாம் என்பதை ஆய்வு செய்யும்.
மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில், “100-கிகாவாட் (GW) எதிர்காலத்திற்கான இந்தியாவின் அணுசக்தி விநியோகச் சங்கிலியை உருவாக்குதல்” குறித்த பிரத்யேக முழுமையான அமர்வு இடம்பெற்றுள்ளது. அதேவேளையில், “நீலப் பொருளாதாரத்திற்கான பொறியியல்: நிலையான எதிர்காலத்திற்கான கடல்சார், கடலடி மற்றும் ஆழ்கடல் தொழில்நுட்பங்கள்” என்ற தலைப்பிலான அமர்வானது, இந்தியாவின் கடல்சார் மற்றும் பெருங்கடல் பொருளாதாரத் திறனை முழுமையாகப் பயன்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்பங்கள் குறித்து விரிவாக ஆராயும்.
(அமைச்சர் – இடம் ஒதுக்கப்பட்டுள்ளது) பங்கேற்கும் “வடிவமைப்பிற்கு அப்பால் நகர்தல்: இந்தியாவின் விண்வெளி, பாதுகாப்பு மற்றும் உயர் தொழில்நுட்ப உற்பத்தி” (Moving Beyond Build-to-Print: India’s Aerospace, Defence & Hi-Tech Manufacturing) என்ற அமர்வின் மூலம் உற்பத்திப் போட்டித்தன்மையின் மீது கவனம் செலுத்தப்படும். அதே வேளையில், “அறிவார்ந்த எதிர்காலத்திற்கான பொறியியல்: செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் இரட்டையர்கள் மற்றும் தரவு சார்ந்த மெக்கானிக்கல் இன்ஜினியரிங்” (Engineering the Intelligent Future: AI, Digital Twins and Data-Driven Mechanical Engineering) என்ற அமர்வு செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் இரட்டையர்கள் (Digital Twins) மற்றும் மேம்பட்ட தரவு அமைப்புகள் எவ்வாறு பொறியியல் மற்றும் உற்பத்தித் துறைகளை உருமாற்றுகின்றன என்பதை ஆராயும்.
மாநாட்டை நடத்தும் நகரமாக சென்னை தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து ஏஎஸ்எம்இ இந்தியாவின் தலைவரும் இயக்குநருமான மதுகர் சர்மா கூறுகையில், “மெக்கானிக்கல் இன்ஜினியரிங், உற்பத்தித் திறன் மற்றும் தொழில்நுட்பக் கல்வி ஆகியவற்றில் சென்னை நீண்டகாலமாக இந்தியாவின் முதன்மை மையங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. வாகனத் துறை மற்றும் கனரக பொறியியல் முதல் எரிசக்தி, விண்வெளி மற்றும் ஆராய்ச்சி வரை, இந்தியாவின் தொழில் வளர்ச்சி வரலாற்றில் இந்நகரம் ஒரு முக்கியப் பங்கை ஆற்றியுள்ளது. இங்கு ஐஎம்இசிஇ இந்தியா 2026 மாநாட்டை நடத்துவது அந்தப் பாரம்பரியத்திற்கான அங்கீகாரமாகவும், பொறியியல் மற்றும் உற்பத்தியின் எதிர்காலம் குறித்து விவாதிக்க இந்தியா முழுவதிலும் இருந்தும் உலகெங்கிலும் இருந்தும் பொறியியல் தலைவர்களை ஒன்றிணைப்பதற்கான ஒரு வாய்ப்பாகவும் அமைகிறது” என்றார்.
மாநாட்டின் தலைவர் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக-தொழில் துறை ஒத்துழைப்பு மையத்தின் (CUIC) இயக்குநரான டாக்டர் கே. சண்முக சுந்தரம் மேலும் கூறுகையில், “ஐஎம்இசிஇ இந்தியா 2026 தொழில் துறை, கல்வித்துறை, அரசு, ஆராய்ச்சியாளர்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் மாணவர்களை ஒரு பொதுவான தளத்தில் ஒன்றிணைக்கிறது. இந்தத் தரப்பினரிடையே ஒத்துழைப்பை வளர்ப்பதன் மூலம், இந்த மாநாடு புதுமைகளை விரைவுபடுத்தவும், தொழில்-கல்வித்துறை கூட்டாண்மையை வலுப்படுத்தவும், இந்தியாவின் பொறியியல் இலக்குகளை அடைய ஆதரவளிக்கவும் மகத்தான வாய்ப்புகளை உருவாக்குகிறது” என்றார்.
தொழில்நுட்பம் மற்றும் தொழில் துறைக்கு அப்பால், திறமை மேம்பாடு மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு இந்த மாநாடு வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‘MEEd இந்தியா 2026 பொறியியல் கல்வி கருத்தரங்கின்’ (MEEd India 2026 Engineering Education Symposium) தொடர்ச்சியாக, இந்நிகழ்வில் பிரைன் போல்ட் (Brain Bolt), தி இன்ஜினியர்ஸ் ஸ்பிரிண்ட் 2026 (The Engineers Sprint 2026), ஏஎஸ்எம்இ ஐஷோ இந்தியா (ASME ISHOW India), இன்னோவேஷன் ஸ்கொயர் (Innovation Square) மற்றும் பொறியியலில் பெண்கள் (Women in Engineering) போன்ற சிறப்புத் திட்டங்கள் இடம்பெறுகின்றன. இவை மாணவர்கள், தொழில்முனைவோர் மற்றும் வளர்ந்து வரும் கண்டுபிடிப்பாளர்கள் தங்களது தீர்வுகளைக் காட்சிப்படுத்தவும், பொறியியல் துறை தலைவர்களுடன் கலந்துரையாடவும் சிறந்த வாய்ப்புகளை வழங்குகின்றன.
செப்டம்பர் 5 வரை நடைபெறும் ‘ஐஎம்இசிஇ இந்தியா 2026’ இந்தியாவின் முன்னணி பொறியியல் மற்றும் உற்பத்தி மையமாக சென்னையின் நிலையை மீண்டும் உறுதிப்படுத்துவதோடு, இந்தியாவின் பொறியியல் துறையின் எதிர்காலத்தை வடிவமைக்க
உதவும் உயர்மட்டக் கலந்துரையாடல்கள், கூட்டாண்மைகள் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான முதன்மைத் தளத்தையும் உருவாக்குகிறது.
