Tamilவிளையாட்டு

உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் – வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி

10 அணிகள் இடையிலான 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நாட்டிங்காமில் நேற்று நடந்த 10-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, வெஸ்ட்இண்டீசுடன் பலப்பரீட்சை நடத்தியது. ‘டாஸ்’ ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள், வெஸ்ட் இண்டீசின் ஷாட்பிட்ச் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறினர். ஷெல்டன் காட்ரெல், ஒஷானே தாமஸ், ஆந்த்ரே ரஸ்செலின் பந்து வீச்சில் அனல் பறந்தது. சற்று எழும்பி வந்த பந்துகளில் கேப்டன் ஆரோன் பிஞ்ச் (6 ரன்), டேவிட் வார்னர் (3 ரன்), கவாஜா (13 ரன்) ஆகியோர் கேட்ச் ஆனார்கள். மேக்ஸ்வெல்லும் (0) பவுன்சர் பந்தில் சிக்கினார். மார்கஸ் ஸ்டோனிசும் (19 ரன்) நிலைக்கவில்லை.

அப்போது ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுக்கு 79 ரன்களுடன் (16.1 ஓவர்) பரிதவித்தது. இந்த நெருக்கடிக்கு மத்தியில் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித்தும், விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியும் இணைந்து அணியை வீழ்ச்சியில் இருந்து மீட்டெடுத்தனர். ஸ்கோர் 147 ரன்களாக உயர்ந்த போது அலெக்ஸ் கேரி 45 ரன்களில் (55 பந்து, 7 பவுண்டரி) அவுட் ஆனார். சுமித் 26 ரன்னில் வெளியேறி இருக்க வேண்டியது. அவருக்கு காட்ரெல் கேட்ச் வாய்ப்பை தவற விட்டார்.

அடுத்து நாதன் கவுல்டர்-நிலே வந்தார். பவுலரான கவுல்டர்-நிலே திகைப்பூட்டும் வகையில் வெளுத்து வாங்கினார். அவரது பேட்டில் பட்ட பந்துகள் எல்லாம் தெறித்து ஓடின. இதனால் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் மளமளவென எகிறியது. 41 பந்துகளில் அவர் அரைசதம் அடித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் அவர் அடித்த முதல் அரைசதம் இது தான். அவர் 61 ரன்னில் வழங்கிய கேட்ச் வாய்ப்பை ஹெட்மயர் கோட்டை விட்டார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி அட்டகாசப்படுத்திய கவுல்டர்-நிலே, காட்ரெலின் பந்து வீச்சில் 2 சிக்சர்களை அடுத்தடுத்து விளாசினார்.

மறுபக்கம் சூழ்நிலையை உணர்ந்து அவசரப்படாமல் ஆடிய ஸ்டீவன் சுமித் (73 ரன், 103 பந்து, 7 பவுண்டரி) 45-வது ஓவரில் பந்தை தூக்கியடித்த போது, அதை எல்லைக்கோடு அருகே காட்ரெல் ஒற்றைக்கையால் பிடித்து பிரமிக்க வைத்தார். வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை கலங்கடித்த நாதன் கவுல்டர்-நிலே 92 ரன்களில் (60 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்) கேட்ச் ஆனார். உலக கோப்பை கிரிக்கெட்டில் 8-வது வரிசையில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை கவுல்டர்-நிலே படைத்தார்.

முடிவில் ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் 288 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. கடைசி 9 ஓவர்களில் மட்டும் அவர்கள் 82 ரன்களை திரட்டினர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் பிராத்வெய்ட் 3 விக்கெட்டுகளும், ரஸ்செல், காட்ரெல், தாமஸ் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் எக்ஸ்டிரா வகையில் 24 வைடு உள்பட 27 ரன்களை வாரி வழங்கினர்.பின்னர் 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடியது. இவின் லீவிஸ் ஒரு ரன்னில் கேட்ச் ஆனார். அதிரடி சூரர் கிறிஸ் கெய்ல், மிட்செல் ஸ்டார்க்கின் ஒரே ஓவரில் 2 முறை அவுட் ஆனார். இரண்டு முறையும் டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்து தப்பினார். கடைசியில் அதே ஸ்டார்க்கின் பந்து வீச்சிலேயே கெய்ல் (21 ரன், 17 பந்து, 4 பவுண்டரி) எல்.பி.டபிள்யூ. ஆனார். இந்த தடவை டி.ஆர்.எஸ். கைகொடுக்கவில்லை. அடுத்து வந்த ஷாய் ஹோப்பும், நிகோலஸ் பூரனும் பதற்றமின்றி ஆடி ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். பூரன் 40 ரன்னிலும், அவரைத் தொடர்ந்து இறங்கிய ஹெட்மயர் 21 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். நிலைத்து நின்று ஆடிய ஷாய் ஹோப் (68 ரன், 105 பந்து), ஆந்த்ரே ரஸ்செல் (15 ரன்) வெளியேறியதும் நெருக்கடி உருவானது.

அதன் பிறகு கேப்டன் ஜாசன் ஹோல்டர் அணியை தூக்கி நிறுத்த போராடினார். அவர் ஆடிய விதம் வெற்றி யார் பக்கம் என்பதை கணிக்க முடியாத அளவுக்கு இருந்தது. கடைசி 5 ஓவர்களில் அந்த அணியின் வெற்றிக்கு 38 ரன்கள் தேவைப்பட்டதால் பரபரப்பு தொற்றியது. கைவசம் 4 விக்கெட் இருந்தது.இந்த சமயத்தில் பந்து வீசிய மிட்செல் ஸ்டார்க், ஒரே ஓவரில் பிராத்வெய்ட் (16 ரன்), ஹோல்டர் (51 ரன், 57 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆகியோரை காலி செய்தார். அத்துடன் வெஸ்ட் இண்டீசின் நம்பிக்கையும் தகர்ந்து போனது.

50 ஓவர்கள் முழுமையாக ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியால் 9 விக்கெட்டுக்கு 273 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 15 ரன்கள் வித்தியாசத்தில் 2-வது வெற்றியை பெற்றது. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 46 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். நடப்பு தொடரில் 5 விக்கெட் வீழ்த்திய முதல் பவுலர் இவர் தான். 92 ரன்கள் எடுத்த கவுல்டர்-நிலே ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *