இன்று ‘தீத்தடுப்பு தினம்’!
தீ விபத்துகளால் ஏற்படும் உயிர்ச்சேதம், பொருட்சேதம் மற்றும் காயங்கள் போன்ற பெரும் பாதிப்புகளைத் தவிர்க்கவும், தீயைக் கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் ஆண்டுதோறும் ஏப்ரல் 14-ஆம் தேதி ‘தீத்தடுப்பு தினம்’ (Fire Extinguishing Day) கடைப்பிடிக்கப்படுகிறது.
தீ விபத்து ஏற்படும் போது ஆரம்ப நிலையிலேயே அதனை எதிர்கொண்டு அணைப்பதற்கான பயிற்சியையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சமூகத்தில் கொண்டு சேர்ப்பதே இந்நாளின் முக்கிய நோக்கமாகும்.
கடந்த 1723-ஆம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த ஆம்புரோஸ் காட்ஃபரே என்பவர் முதன்முதலில் தீயணைப்பானைக் கண்டறிந்ததோடு, நவீன தீயணைப்பு முறைகளுக்கு வித்திட்டார்.
தீயணைப்பான்களைக் கொண்டு நாமே தீயை அணைக்கும் வழிமுறைகளைத் தெரிந்துகொள்வதுடன், பாதுகாப்பு விதிகளையும் முறையாகப் பின்பற்றினால் பெரும் அசம்பாவிதங்களைத் தடுத்து விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்க முடியும் என்பதை இந்நாள் நமக்கு நினைவுறுத்துகிறது.
