Tamilசெய்திகள்

இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள்!

இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை எனப் போற்றப்படும் அண்ணல் அம்பேத்கர், 1891-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் நாள் மகாராட்டிர மாநிலத்தின் அம்பவாடே கிராமத்தில் ராம்ஜி சக்பால் – பீமாபாய் இணையருக்கு 14-வது குழந்தையாகப் பிறந்தார். சிறு வயதிலேயே சாதியக் கொடுமைகளையும் தீண்டாமைத் துயரங்களையும் அனுபவித்த அவர், கல்வி ஒன்றே முன்னேற்றத்திற்கான வழி என்பதை உணர்ந்து மிகச்சிறந்த அறிஞராகத் திகழ்ந்தார்.

தன் மீது அன்பு கொண்ட ஆசிரியர் மகாதேவ அம்பேத்கர் வழங்கிய பெயரையே தனது பெயராக மாற்றிக்கொண்ட இவர், ‘கல்வி, செல்வம், உழைப்பு’ ஆகிய மூன்றும் ஒரு மனிதன் முழுமையடைய அவசியம் என்று வலியுறுத்தினார். பொருளாதார மேதையான இவரின் ஆலோசனையின் அடிப்படையிலேயே 1935-ல் இந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்டது.

பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவை அரசியல் சட்டத்தால் ஒருங்கிணைத்த மாமேதையான இவர், மும்பையில் சித்தார்தா உயர்கல்வி நிலையத்தை உருவாக்கியதோடு, கல்வி என்பது வெறும் தகவல்களைத் திணிப்பது மட்டுமல்ல, அது தனித்தன்மையை வெளிக்கொணர வேண்டும் என முழங்கினார்.

சமத்துவத்தையும் சமூக நீதியையும் நிலைநாட்டத் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட அந்தப் புரட்சியாளரின் பிறந்த தினத்தில், அவர் காட்டிய அறிவுப் பாதையில் பயணிக்க உறுதி ஏற்போம்.