ஏமனில் ஒரு சில நிமிடங்கள் மட்டும் நீடித்த போர் நிறுத்தம்! – மீண்டும் சண்டை தொடங்கியது
ஏமனில் உக்கிரமாக நடைபெற்று வரும் உள்நாட்டுச் சண்டைக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன்படி உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் ஹொடைடா மாகாணம் மற்றும் துறைமுக நகரமான ஹொடைடாவில் போர் நிறுத்தம் செய்வது என்று ஹவுதி கிளர்ச்சியாளர்களும், அரசாங்கத் தரப்பும் ஒப்புக்கொண்டன.
ஹொடைடா துறைமுகம் நிவாரணப் பொருள்கள் செல்வதற்கான நுழைவாயிலாக இருக்கிற முக்கியத்துவம் வாய்ந்த நகரம். ஆனால், சண்டை நிறுத்தம் தொடங்கிய உடனேயே இந்த நகரில் ஆங்காங்கே மோதல்கள் நிகழ்ந்துள்ளன. கிழக்கு ஹொடைடாவில் அரசாங்கப் படைகள் மீது கிளர்ச்சியாளர்கள் ஷெல் குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த வியாழக்கிழமை ஸ்வீடனில் ஐ.நா. ஏற்பாடு செய்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன. நான்கு ஆண்டுகளாக நடந்து வரும் இந்த சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தொடக்கமாக இது இருக்கும் என்று சிலர் நம்பினர்.
உடனடியாக போர் நிறுத்தம் அமலுக்கு வருவதாக முதலில் கூறப்பட்டாலும், ஆங்காங்கே நடந்து வந்த தாக்குதல்களாலும், கடுமையான மோதல்களாலும் சண்டை நிறுத்தம் செயல்பாட்டுக்கு வருவது தாமதமடைந்தது குறிப்பிடத்தக்கது.