ஐபிஎல் கிரிக்கெட் – ராஜஸ்தான், டெல்லி இன்று மோதல்
நடப்பு ஐ.பி.எல். தொடரை அமர்க்களமாக தொடங்கிய அணிகளில் ராஜஸ்தான் ராயல்சும் ஒன்று. சார்ஜாவில் நடந்த முதல் இரு ஆட்டங்களில் சென்னைக்கு எதிராக 216 ரன்கள் குவித்தும், பஞ்சாப்புக்கு எதிராக 224 ரன்களை ‘சேசிங்’ செய்தும் வெற்றி பெற்றது. அதன் பிறகு மற்ற இடங்களில் நடந்த கொல்கத்தா, பெங்களூரு, மும்பைக்கு எதிரான ஆட்டங்களில் வரிசையாக தோற்று பின்தங்கியுள்ளது. இப்போது மறுபடியும் சார்ஜாவில் கால்பதிப்பதால் கூடுதல் நம்பிக்கையுடன் ராஜஸ்தான் வீரர்கள் களம் இறங்குவார்கள். தங்களது முதல் இரு ஆட்டங்களில் அரைசதம் விளாசிய கேப்டன் ஸ்டீவன் சுமித்தும், சஞ்சு சாம்சனும் மற்ற 3 ஆட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் வீழ்ந்தது பின்னடைவாக அமைந்தது. அவர்கள் இருவரும் பார்முக்கு திரும்ப வேண்டியது அவசியமாகும். கடந்த ஞாயிற்றுக்கிழமை துபாய் வந்தடைந்த ராஜஸ்தான் அணியின் அதிரடி ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்சின் 6 நாள் தனிமைப்படுத்தும் நடைமுறை இன்னும் நிறைவடையாததால் அவர் இந்த ஆட்டத்தில் ஆட வாய்ப்பில்லை.
இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 4-ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் கண்டுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிட அரியணையில் ஏறும். டெல்லி அணி பேட்டிங், பந்து வீச்சில் வலுவாக காணப்படுகிறது. பேட்டிங்கில் ஸ்ரேயாஸ் அய்யர், பிரித்வி ஷா, தவான், ரிஷாப் பண்ட், ஹெட்மயர் அசத்துகிறார்கள். பேட்டிங் வரிசை மாற்றப்படாததால் ரஹானே கூட அந்த அணியில் வெளியே இருக்க வேண்டிய நிலைமை உள்ளது. இதே போல் பந்து வீச்சில் ரபடா, நோர்டியா, அஸ்வின், ஸ்டோனிஸ் மிரட்டுகிறார்கள். அந்த அணி ஏற்கனவே சார்ஜாவில் நடந்த கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 228 ரன்கள் திரட்டி மலைக்க வைத்தது. எனவே இந்த ஆட்டத்திலும் டெல்லி அணி ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது. மேலும் சிறிய மைதானம், பேட்டிங்குக்கு உகந்த ஆடுகளம் என்பதால் மீண்டும் 200 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதனால் ரசிகர்களுக்கு ‘வாணவேடிக்கை’ காத்திருக்கிறது.