சேலத்தில் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலத்தில் ஒரு பகுதியை முதல்வர் திறந்து வைத்தார்
சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியை அடுத்த ராமகிருஷ்ணா சிக்னலில் இருந்து, ஏ.வி.ஆர் ரவுண்டானா வரையில் ஈரடுக்கு மேலம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. சுமார் 6 புள்ளி 8 கிலோ மீட்டர் தொலைவுக்கு 173 தூண்களுடன் பிரமாண்டமாகவும் நவீன தொழில்நுட்பத்துடனும் உருவாகி வரும் இந்த பாலத்தின் ஒருபகுதியில் பணிகள் முடிவடைந்தன.
அதாவது ஏ.வி.ஆர். ரவுண்டானா முதல் அஸ்தம்பட்டிவரை சுமார் 2.5 கி.மீ. தொலைவுக்கு பணிகள் முடிந்த பாலப்பகுதியை முதல்வர் இன்று திறந்துவைத்தார். இந்த பாலம் சுமார் 320 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. பாலம் திறப்பு விழாவில் சேலம் திமுக எம்.பி., எஸ்.ஆர்.பார்த்தீபன், சேலம் வடக்கு எம்.எல்.ஏ. ராஜேந்திரன் ஆகியோரும் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், ” உலகத்தரத்திற்கு ஏற்ப சாலைகளை உருவாக்கவே மத்திய அரசு 8 வழிச்சாலை திட்டத்தை அறிவித்தது. மக்களின் வசதிக்காகவே 8 வழிச்சாலை திட்டம் கொண்டு வரப்படுகிறது. 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை சமாதானப்படுத்தி திட்டம் நிறைவேற்றப்படும். வளர்ச்சி, மேம்பாடு, சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கவே 8 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. மக்களிடம் இருந்து நிலங்களை கையகப்படுத்தி 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற மாட்டோம்.
சேலத்திற்கு அருகே 60 ஏக்கர் பரப்பளவில் பஸ் போர்ட் அமைக்கப்படும். தமிழகத்தில் போக்குவரத்து நெரிசலை பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. சேலம் முதல் செங்கப்பள்ளி வரை தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் பேசினார்.