பரிகார பூஜை விவகாரம்! – சபரிமலை கோவில் தந்திரி விளக்கம்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த ஜனவரி 2-ந்தேதி 50 வயதுக்குட்பட்ட கனகதுர்கா, பிந்து ஆகிய 2 பெண்கள் சன்னிதானத்துக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து அன்று கோவில் தந்திரி சன்னிதானத்தை தூய்மைப்படுத்தி பரிகார பூஜை செய்ததாக கூறப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஐயப்பன் கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு திருவாங்கூர் தேவசம்போர்டுக்கு 11 பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், “சித்திர ஆட்ட விழா மற்றும் மண்டல-மகரவிளக்கு விழா காலங்களில் ஐயப்பன் கோவில் பல பிரச்சினைகளை சந்தித்தது. இந்த பிரச்சினைகள் எழுந்ததால் கோவிலின் புனிதத்தை மீட்பதற்காக இதுபோன்ற பரிகார பூஜைகள் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. டிசம்பர் 31-ந்தேதி எந்த பூஜைகளும் நடைபெறவில்லை, 1-ந்தேதி பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதனால் தான் 2-ந்தேதி பரிகார பூஜை செய்யப்பட்டது. பெண்கள் நுழைந்ததற்காக பரிகார பூஜை செய்ததாக கூறுவது அடிப்படை ஆதாரமற்றது” என்று கூறியுள்ளார்.