Tamilசெய்திகள்

அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனரின் மனிதாபிமான செயல்! – கேரளாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் எல்சினா. பெங்களூருவில் உள்ள கல்லூரியில் எல்சினா பட்ட மேற்படிப்பு படித்து வருகிறார். கல்லூரியில் ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பிக்க எர்ணாகுளத்திற்கு ஆய்வுப்பணிக்கு வந்தார்.

இதற்காக மதுரையில் இருந்து எர்ணாகுளம் செல்லும் கேரள அரசு பஸ்சில் பயணம் செய்தார். அவரை அழைத்துச் செல்ல வரும்படி உறவினருக்கு ஏற்கனவே தகவல் கொடுத்திருந்தார்.

மதுரை-எர்ணாகுளம் அரசு பஸ் இரவு 11 மணிக்கு மாணவி இறங்க வேண்டிய பொடிமட்டம் பஸ் நிறுத்தத்தை சென்றடைந்தது. அப்போது கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு அந்த பகுதியே மயான பூமிபோல காட்சி அளித்தது.

மேலும் அந்த பகுதியில் மழையும் கொட்டி கொண்டு இருந்தது. மாணவி, உறவினரை தொடர்பு கொண்டபோது மழையால் அங்கு வர தாமதம் ஆவதாகவும், அரை மணிநேரத்தில் வந்து விடுகிறேன் என்றும் கூறினார்.

உறவினர் வர அரை மணிநேரம் ஆகும் என்ற தகவலை மாணவி, பஸ் கண்டக்டர், டிரைவரிடம் தெரிவித்தார். இளம்பெண் ஒருவரை தனியாக நடுநிசி நேரத்தில் யாருமில்லாத இடத்தில் விட்டு செல்ல கண்டக்டர், டிரைவருக்கு மனம் வரவில்லை.

அவர்கள், இதுபற்றி பஸ்சில் பயணம் செய்த மற்ற பயணிகளிடம் கூறினர். மாணவியின் உறவினர் வரும் வரை காத்திருந்து, மாணவியை அவரிடம் ஒப்படைத்த பின்பு புறப்பட்டு செல்வோமா? என்று கேட்டனர்.

இதற்கு பயணிகளும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து மாணவி எல்சினாவின் உறவினர் வரும் வரை டிரைவரும், கண்டக்டரும், பஸ் பயணிகளும் காத்திருந்தனர். அவர் வந்ததும் எல்சினாவை அவரிடம் பத்திரமாக ஒப்படைத்த பின்பு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இந்த சம்பவத்தை பஸ்சில் பயணம் செய்த பயணி ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இதற்கு பூஞ்சார் தொகுதி எம்.எல்.ஏ. பி.சி. ஜார்ஜ் பாராட்டு தெரிவித்தார்.

எனது தொகுதிக்குட்பட்ட பகுதியில் மாணவி ஒருவருக்கு பாதுகாப்பாக இருந்த பஸ் கண்டக்டர் ஷாஜுதீன், டிரைவர் டென்னிஸ் சேவியர் ஆகியோரை பாராட்டுகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

இவரை போல ஏராளமானோர் டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகளை பாராட்டி கருத்து பதிவிட்டு வருகிறார்கள். மனிதநேயம் மரித்து போகவில்லை. இவர்களை போன்றோர் வடிவில் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது என்று இவர்களுக்கு பாராட்டுக்கள் குவிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *