Tamilசெய்திகள்

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அணியும் செருப்பின் விலை ரூ. 1.34 லட்சம் – தெலுங்கு தேசம் கட்சி குற்றச்சாட்டு

தெலுங்கு தேசம் கட்சியின் செய்தி தொடர்பாளர் வெங்கட்ரமணா ரெட்டி கூறியதாவது:-

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்து மதிப்பு கடந்த 2004-ம் ஆண்டு ரூ.1.70 கோடியாக இருந்தது. 2009-ம் ஆண்டு இடைத்தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தேர்தல் கமிஷனில் சமர்ப்பித்த பிரமாண பத்திரத்தில் ரூ.77 கோடி சொத்து உள்ளதாக தெரிவித்து இருந்தார்.

2011-ம் ஆண்டு ரூ.445 கோடியாக சொத்து மதிப்பு அதிகரித்தது. இந்நிலையில் 2019-ம் ஆண்டு அவரது சொத்து மதிப்பு ரூ.510 கோடியாக அதிகரித்து காணப்பட்டது. ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தை ராஜசேகர ரெட்டி முதலமைச்சராக பதவி ஏற்றதும் பல கோடி ரூபாய் அவரது வங்கி கணக்கிற்கு வந்தது.

அவரிடம் உள்ள கருப்பு பணத்தை கணக்கிட்டால் பல ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும். இவ்வளவு சொத்து மதிப்பை வைத்துக்கொண்டு அவர் தனக்கு சொந்தமாக வீடு இல்லை என பேசி வருகிறார். அப்படியானால் ஐதராபாத் தாமரை குளம், பெங்களூர் யலஹங்கா, தாடி பள்ளி கடப்பா, புலி வெந்துலா ஆகிய இடங்களில் உள்ள அரண்மனைகள் யாருடைய பெயரில் உள்ளது என்பதை ஜெகன்மோகன் ரெட்டி தெளிவுபடுத்த வேண்டும்.

அந்த அரண்மனைகள் உங்களது பெயரில் இல்லை என்றால் எங்களுக்கு கொடுங்கள் நாங்கள் அனாதை இல்லங்களை நடத்திக் கொள்கிறோம். ஜெகன்மோகன் ரெட்டி அணியும் செருப்பு புல்லோட்டி காம்போ என்ற நிறுவனத்தினால் முதலை தோலால் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1.34 லட்சம்.

அவர் குடிக்கும் மினரல் வாட்டர் ஒரு பாட்டிலின் விலை ரூ.5,500. இப்படி விலை உயர்ந்த பொருட்களை பயன்படுத்தும் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி எப்படி ஏழைகளின் பங்காளன் என்று கூறுகிறார். அவருடைய சொத்து விவரங்களை வெளிப்படையாக வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.