Tamilசினிமா

ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி – நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு லுக் அவுட் நோட்டீஸ்

சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம், முதலீட்டாளர்களிடம் முதலீடாக பெற்ற ரூ.2,438 கோடி ரூபாயை மோசடி செய்ததாக பொளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குனர் உள்பட 13 பேரை கைது செய்துள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களின் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கியுள்ளனர். இது தொடர்பாக  செய்தியாளர்களிடம் பேசிய பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. ஆசையம்மாள், ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் இதுவரை ரூ.6.35 கோடி பணம், ரூ.1.13 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருட்கள் மற்றும் 22 கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் நடிகர் ஆர்.கே.சுரேஷ் துபாயில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் ரூசோ அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், நடிகர் ஆர்.கே.சுரேஷ் குறித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.