Tamilவிளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் – முதல் இன்னிங்சில் 132 ரன்கள் எடுத்து நியூசிலாந்து ஆல் அவுட்

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இந்நிலையில், இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக நியூசிலாந்து முன்னாள் கேப்டன் பிரன்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்டார்.
டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் லாதம், வில் யங் களமிறங்கினர். இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட் வீழ்த்தினர். முன்னணி வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாகினர்.

நியூசிலாந்து அணியின் காலின் டி கிராண்ட்ஹோம் ஓரளவு தாக்குப்பிடித்தார். அவர் 42 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.கடைசி கட்டத்தில் டிம் சவுத்தி 26 ரன் எடுத்தார். இறுதியில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 132 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன், பாட்ஸ் தலா 4 விக்கெட்டும், பிராட், ஸ்டோக்ஸ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் தொடக்கம் சிறப்பாக அமைந்தது. முதல் விக்கெட்டுக்கு 59 ரன் சேர்த்த அந்த அணி அதன்பின் விக்கெட்டுகளை இழந்தது. ஜாக் கிராவ்லி 43 ரன்களும், அலெக்ஸ் லீஸ் 25 ரன்களும் எடுத்தனர்.

முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து அணியை விட 13 ரன்கள் இங்கிலாந்து பின்தங்கியுள்ளது.

நியூசிலாந்து சார்பில் டிரண்ட் போல்ட், டிம் சவுதி, கைல் ஜாமிசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், காலின் டி கிரான்ட்ஹோம் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.