Tamilசெய்திகள்

இந்திய விமானம் தாங்கி போர்க்கப்பல் விக்ராந்த்தின் 4-ம் கட்ட ஒத்திகை வெற்றிகரமாக முடிந்தது

தற்சார்பு இந்தியா மற்றும் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் விக்ராந்த் போர் கப்பலை, இந்திய கடற்படை மற்றும் கொச்சி கப்பல் கட்டும் தளம் ஆகியவை இணைந்து முற்றிலும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட பாகங்களை கொண்டு உருவாக்கி உள்ளன.

இந்தக் கப்பலின் முதற்கட்ட கடல் ஒத்திகை ஆகஸ்ட் 2021-ல் மேற் கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாம் கட்ட ஒத்திகை பயிற்சிகள், கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக 4-ம் கட்ட கடல் ஒத்திகை நேற்று நிறைவடைந்துள்ளது. இந்த ஒத்திகையின்போது, விமானம் புறப்பட்டுச் செல்லுதல் உள்ளிட்ட பயிற்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

விக்ராந்த் போர் கப்பல் இந்த மாத இறுதியில் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 22 அன்று இந்த கப்பல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.