Tamilசெய்திகள்

இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் – ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு

பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணியில் இணைந்து போட்டியிட ஓ.பி.எஸ். முடிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் 2 நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து பேசினர். கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது ஓ.பன்னீர்செல்வத்திடம் பாரதிய ஜனதா கட்சியின் சின்னமான தாமரை சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் அவரோ, நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க. என்று கூறி வருகிறோம். இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு இன்னும் நிலுவையிலேயே உள்ளது. இது போன்ற சூழலில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டால் தங்களது தனித்தன்மை போய் விடும் என்று தெரிவித்துள்ளார்.

இரட்டை இலை சின்னம் தற்போது எடப்பாடி பழனிசாமியிடமே உள்ளது. எனவே பொதுவான சின்னத்தில் போட்டியிடுவதைவிட தாமரை சின்னத்திலேயே களம் இறங்குவது நல்லது என்றும் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்திடம் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று இரவு பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் சந்தித்து பேசினார்கள். இரண்டாம் கட்டமாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது போட்டியிடும் தொகுதிகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளை எடுத்துக் கூறி அந்த தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை முடிந்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளோம். பா.ஜனதா கூட்டணி மெகா கூட்டணியாக மாறி இருக்கிறது. பாரதிய ஜனதா நிர்வாகிகளுடன் நாங்கள் நடத்திய இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. பாராளுமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவோம்.

இரட்டை இலை சின்னம் தொடர்பாக வெளியாகி இருக்கும் தீர்ப்பு தற்காலிகமானதுதான். சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும். வழக்கு இன்னும் நிலுவையில்தான் உள்ளது. எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதே என்று கேட்கிறீர்கள்.

என்னையும்தான் ஒருங்கிணைப்பாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ளது. எனவே, இரட்டை இலை சின்னம் தொடர்பான சாதகம், பாதகங்களை தேர்தல் ஆணையம் விசாரித்து முடிவை அறிவிக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது. கூட்டணி என்று வந்து விட்டால் ஒரே தொகுதிகளை இரண்டு, மூன்று கட்சிகள் கேட்பது இயல்பானதுதான். அவற்றையெல்லாம் பேசி சரி செய்து போட்டியிடு வோம். பா.ஜனதா கூட்டணியில் எத்தனை இடங்களில் போட்டியிடுவோம் என்பது பற்றி விரைவில் தெரிவிப்போம்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.