Tamilசெய்திகள்

இலங்கை பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்

இலங்கையில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, எரிபொருள் மற்றும் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக அரசுக்கு எதிரான பொதுமக்களின் போராட்டம் நீடித்து வருகிறது.

பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது சகோதரரும், அதிபருமான கோத்தபய ராஜபக்சே ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி இலங்கையில் நேற்று பாராளுமன்றத்திற்கு வெளியே திரண்ட பொதுமக்கள் முற்றுகை போராட்டங்களில் ஈடுபட்டனர்.

பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலைகள் விண்ணைத் தொட்டுள்ளதாகவும் ஒரு கிலோ அரிசி 200 ரூபாயாகவும், ஒரு கிலோ ஆப்பிள் 1000 ரூபாய்க்கும், ஒரு கிலோ பேரிக்காய் 1500 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரி ஒருவர் தெரிவித்தார். அவற்றை வாங்குவதற்கு மக்களிடம் பணம் இல்லை என்றும் அவர் கூறினார்.

இலங்கை அரசு அனைத்தையும் சீனாவுக்கு விற்று விட்டதாகவும், இதுதான் பொருளாதார பிரச்சினைக்கு காரணம் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். எனவே அதிபரும், பிரதமரும் பதவி விலகி வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றும் போராட்டக்காரரகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் ஏப்ரல் ஒன்றாம் தேதி தேதி முதல் நடைமுறையில் இருந்து வரும் அவசர நிலை வாபஸ் பெறப்படுவதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார். நள்ளிரவு முதல் அவசர நிலை சட்டம் திரும்பப் பெறப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.