Tamilசெய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – நாளை முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மறைவால் இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை (31-ந்தேதி) தொடங்கி வருகிற 7-ந்தேதி வரை நடக்கிறது.

வேட்பு மனுக்களை வேட்பாளர்கள் 5-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை தவிர்த்து தினமும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணிவரை வேட்பு மனுக்களை மாநகராட்சி கமிஷனரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவக்குமாரிடம் தாக்கல் செய்யலாம். வேட்பு மனுக்கள் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் மனு தாக்கலின் போது மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்திலே அரசியல் கட்சியினர் நிற்க வேண்டும் என்பதற்காக மாநகராட்சி அலுவலகத்தின் 4 புறமும் 100 மீட்டர் தூரத்துக்கு எல்லை கோடுகள் வரையபப்பட்டுள்ளது.

வேட்பு மனு தாக்கலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் வேட்பாளர்கள் தங்களுடன் 4 பேரை மட்டும் அழைத்து வர வேண்டும் என்றும், கோஷம் போட கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நாளை வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.