Tamilசெய்திகள்

ஈரோடு மக்களவை தொகுதி எம்.பி கணேச மூர்த்தி உயிரிழந்தார்

ஈரோடு மக்களவை தொகுதி எம்.பி.யாக இருந்தவர் கணேச மூர்த்தி. 2019-ம் ஆண்டு மதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இவர் மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் 72 மணி நேர சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை கணேச மூர்த்தி காலமானார். சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாரடைப்பால் உயிர் பிரிந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 24 -ந்தேதி கணேச மூர்த்தியை பார்ப்பதற்காக அவரது மகன் கபிலன் வீட்டிற்கு சென்றார். அப்போது கணேச மூர்த்தி மயக்க நிலையில் இருந்தார். இதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர் உடனடியாக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். அப்போது அவர் தென்னை மரத்துக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மாத்திரையை தின்று தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. உடனடியாக அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். தொடர்ந்து அவருக்கு எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்பட்டது. இந்த நிலையில்தான் இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.