Tamilசெய்திகள்

உக்ரைனில் இருந்து வந்த ஒரு லட்சம் அகதிகளுக்கு அமெரிக்கா வரவேற்பு

 

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுக்க தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாதமாகிறது. உக்ரைனில் பல பகுதிகளிலும் ரஷிய கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால், உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகலாக தப்பிச் செல்கின்றனர்.

இந்நிலையில், ரஷியாவின் படையெடுப்பு காரணமாக 3.5 மில்லியன் அகதிகள் வெளியேறுவதால், உக்ரைனில் இருந்து வரும் ஒரு லட்சம் அகதிகளை அமெரிக்கா வரவேற்கும் என்று அமெரிக்க அதிகாரி கூறினார்.

உக்ரைனில் இருந்து வரும் அகதிகளுக்கு அமெரிக்கா அடைக்கலம் தரும் என்று வெள்ளை மாளிகை பல வாரங்களாக கூறி வரும் நிலையில், பெரும்பாலானவர்கள் தங்கள் தாய்நாட்டிற்கு அல்லது கிழக்கு ஐரோப்பாவைச் சுற்றியுள்ள தங்களின் குடும்ப உறுப்பினர்களுடன் இருக்க விரும்புகிறார்கள் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அமெரிக்காவின் அகதிகள் திட்டத்தின் மூலம் உக்ரேனியர்களின் நுழைவை அமெரிக்கா துரிதப்படுத்தலாம் அல்லது வரக்கூடிய உக்ரேனியர்களின் மொத்த எண்ணிக்கையை விரிவுபடுத்தலாம் என்று அகதிகள் அமைப்பு கூறியுள்ளது.

முன்னதாக, முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கீழ் 15,000 ஆக குறைக்கப்பட்ட பின்னர், பைடன் நிர்வாகம் 2022-ம் ஆண்டிற்கான அகதிகளின் எண்ணிக்கையை 1,25,000 ஆக நிர்ணயித்தது குறிப்பிடத்தக்கது.