Tamilசெய்திகள்

உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க திமுக மூத்த தலைவர்கள் விருப்பம்

தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் நேற்று தனது 45-வது பிறந்தநாளை கொண்டாடினார். வழக்கத்தை விட தி.மு.க.வினர் மிகுந்த எழுச்சியோடு கொண்டாடினார்கள். ஏற்கனவே உதயநிதி ஸ்டாலினுக்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்க வேண்டும் என்று தி.மு.க.வின் பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தி வருகிறார்கள். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்ற கோரிக்கையை நேற்றும் வலியுறுத்தினார்கள்.

இந்த நிலையில் தனது தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலினிடம் அமைச்சரவையில் இடம்பெறுவீர்களா என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

மக்கள் பணி செய்வதையே உறுதிமொழியாக எடுத்து இருக்கிறேன். தி.மு.க. இளைஞர் அணி செயலாளராக மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சராகப் போகிறேன் என்று கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சொல்லி வருகிறார்கள். அதுபற்றி தி.மு.க. தலைவர் (மு.க.ஸ்டாலின்) தான் முடிவெடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சனிப்பெயர்ச்சி முடிந்ததும் எங்கள் சின்னவர் அமைச்சராவது உறுதி என்கிறார்கள் இளைஞர் அணியினர்.

உதயநிதி எம்.எல்.ஏ. ஆனதுமே அவர் அமைச்சராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதலில் தொகுதி பிரச்சினைகளை நேரில் பார்த்து சரி செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். இதையடுத்து தொகுதி முழுக்க தெருத்தெருவாக சென்று கழிப்பிடங்கள், சாக்கடை வசதிகள், பொது சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் நேரில் பார்வையிட்டு அவற்றை சீர் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் பிரச்சினைகளுக்காக அமைச்சர்களை தேடி செல்லும் நிலை இருப்பதால் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கினால் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்று அவரை அமைச்சராக்க குரல் கொடுத்து வரும் அமைச்சர்களும், மூத்த தலைவர்களும் கூறுகிறார்கள்.