Tamilவிளையாட்டு

உலகக் கோப்பை கிரிக்கெட் – பாகிஸ்தானுக்கு வெற்றி இலக்காக 402 ரன்களை நிர்ணயித்த நியூசிலாந்து

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 35-வது லீக் போட்டி பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது. இதில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா இறங்கினர்.

முதல் விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்த நிலையில், கான்வே 35 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய கேப்டன் வில்லியம்சன் ரச்சின் ரவீந்திராவுடன் இணைந்தார். முதலில் நிதானமாக ஆடிய இந்த ஜோடி, சிறிது நேரத்துக்குப் பிறகு அதிரடியாக ஆடியது. ரவீந்திரா மற்றும் வில்லியம்சன் அரை சதம் கடந்தனர்.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரச்சின் ரவீந்திரா பொறுப்புடன் ஆடி சதமடித்தார். உலக கோப்பை தொடரில் ரவீந்திரா அடிக்கும் 3வது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 2-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 180 ரன்கள் சேர்த்த நிலையில் கேன் வில்லியம்சன் 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ரச்சின் ரவீந்திரா 108 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட்டானார். டேரில் மிட்செல் 29 ரன்னும், மார்க் சாப்மென் 39 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் கிளென் பிலிப்ஸ் அதிரடியில் மிரட்டினார். அவர் 25 பந்தில் 41 ரன்கள் சேர்த்தார். இறுதியில், நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 6 விக்கெட்டுக்கு 401 ரன்களை குவித்துள்ளது. இதையடுத்து, 402 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்குகிறது.