Tamilவிளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 25 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடர் வருகிற 26-ந் தேதி முதல் தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இப்போட்டி தொடர் மே 29-ந் தேதி வரை நடக்கிறது.

கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு போட்டிகள் மராட்டிய மாநிலம் மும்பை, புனேயில் மட்டும் நடத்தப்படுகிறது. மும்பையில் உள்ள வான்கடே, பிரபவுர்ன், டி.ஒய்.படேல் ஸ்டேடியம் ஆகிய மைதானங்களில் 55 போட்டிகளும், புனே மைதானத்தில் 15 போட்டிகளும் நடைபெறுகிறது.

பிளே-ஆப் மற்றும் இறுதிப்போட்டிக்கான இடம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டித் தொடரில் மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது என்று முதலில் தெரிவிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை காண மைதானத்தில் 25 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்கான அனுமதியை மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கும், மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்துக்கும் அரசு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சமீபத்தில் மராட்டிய மந்திரி ஆதித்யதாக்கரேவை கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் சந்தித்து பேசியபோது மராட்டியத்தில் நடக்கும் அனைத்து ஐ.பி.எல். போட்டியிலும் 25 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி வழங்க மந்திரி உறுதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா- இலங்கை அணிகள் தர்மசாலாவில் மோதிய 3-வது 20 ஓவர் போட்டியில் 10 ஆயிரம் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.