Tamilசெய்திகள்

ஒருவர் வாரத்திற்கு மூன்று நாட்கள் வேலை செய்தாலே போதும் – பில் கேட்ஸ் கருத்து

மைக்ரோசாப்ட் நிறுவனரான பில் கேட்ஸ் தொழில்நுட்பம் மனிதர்களுக்கு மாற்றாக அமையாது என்ற நம்பிக்கை கொண்டவர் என நம்மில் பலருக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனாலும், அவர் தொழில்நுட்பத்தின் உதவியால் ஒருவர் வாரத்திற்கு மூன்று நாட்கள் வேலை செய்தாலே போதும் என்று கருத்து தெரிவித்து இருக்கிறார். தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த காமெடியனும், எழுத்தாளருமான டிரெவர் நோவா-வுடனான பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய போது பில் கேட்ஸ் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

68 வயதான பில் கேட்ஸ் ஏ.ஐ. எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைவாய்ப்பை பறித்துவிடாது, ஆனால் வேலை பார்க்கும் முறையை முற்றிலுமாக மாற்றியமைத்துவிடும் என்று தெரிவித்துள்ளார். ஏ.ஐ. தொழில்நுட்பம் நம் வாழ்க்கை எந்த அளவுக்கு நல்ல வகையில் மாற்றியமைக்கும் என்பது தொடர்பாகவும் அவர் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்தார்.

“மனிதர்கள் கடினமாக உழைக்க வேண்டும் என்ற நிலை மாறும். அப்படியான ஒரு சமூகத்தில் ஒருவர் வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டும் வேலை பார்த்தாலே போதுமானதாக இருக்கும். அப்போது இயந்திரங்களே உணவு மற்றும் இதர வேலைகள் அனைத்தையும் பார்த்துக் கொள்ளும்,” என்று அவர் தெரிவித்தார்.