Tamilசெய்திகள்

ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிா்காலம் என்ற கோட்பாட்டுடன் இந்தியா பயணிக்கிறது – மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி

மத்திய கால்நடை, மீன்வளத் துறை இணை மந்திரி எல்.முருகன் 2 நாள் பயணமாக நீலகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதன் ஒரு பகுதியாக அவர் எல்லநள்ளி பகுதியில் உள்ள சற்குரு ஆசிரமத்திற்கு சென்றார். அங்கு அவருக்கு ஊர்மக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன்பிறகு பொதுமக்கள் மற்றும் ஊர் தலைவர்களுடன் ஒன்றாக உட்கார்ந்து காலை உணவு சாப்பிட்டார். அப்போது அவரிடம் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கபட்டன. குறிப்பாக நீலகிரி தேயிலைக்கு உரிய நிலையான விலை நிர்ணயிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு பதில் அளித்து பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், இது குறித்து ஏற்கனவே மத்திய மந்திரியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

மத்தியஅரசு வெகுவிரைவில் சிறப்பான முடிவை அறிவிக்கும் என உறுதியளித்தார். அதன்பிறகு அவர்களுக்கு மத்திய அரசின் சாதனை விளக்க கையேடு வழங்கப்பட்டது. அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலையில் பாரதிய மஸ்தூா் சங்க (பி.எம்.எஸ்.) ஆலோசனை கூட்டத்தில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டாா். அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிா்காலம் என்ற கோட்பாட்டுடன் இந்தியா பயணிக்கிறது. ஜி-20 மாநாட்டின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றிருப்பது பெருமைக்குரிய நிகழ்வு. இதன் மூலம் நாடுகளுக்கு இடையேயான கலாசாரம், கல்வி, பொருளாதாரத்தில் சிறந்து விளங்க வழிவகை ஏற்பட்டு உள்ளது. ஜி 20 மாநாடுகள் மூலம் நாடுகளுக்கு இடையே தொழில்நுட்ப பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது பாராளுமன்ற தோ்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிடுவீா்களா என நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த எல்.முருகன், நான் எங்கு போட்டியிடுவேன் என்பது குறித்து கட்சித் தலைமை தான் முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.