Tamilசெய்திகள்

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் பிரேசில் ஜூடோ அணிக்கு உணவு வழங்கும் 8 ஊழியர்களுக்கு கொரோனா!

ஜப்பான் டோக்கியோ நகரில் வருகிற 23-ந்தேதி ஒலிம்பிக் தொடர் தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ள இருக்கும் அணிகள் ஜப்பான் சென்ற வண்ணம் உள்ளன.

ஜப்பானில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளதால், டோக்கியோ நகரில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது நேற்று 1,149 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதத்திற்குப் பிறகு அதிகமான பாதிப்பு இதுவாகும்.

கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்று வெற்றிகரமாக செயல்பட்டு சொந்த நாடு திரும்புவது மிகப்பெரிய சவாலாகும்.

ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடத்தப்படுகின்றன. வீரர்கள், அவர்களுக்கு உதவி செய்பவர்கள், அவர்கள் தங்கும் ஓட்டல் ஊழியர்கள் என அனைவரும் பாதுகாப்பு வளையத்திற்குள் வர உள்ளனர்.

இந்த நிலையில் ஜப்பானில் பிரேசில் ஜூடோ அணிக்கு உணவு வழங்க ஒரு ஓட்டலை ஒலிம்பிக் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. அந்த ஓட்டலில் உள்ள 8 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது அந்த ஒட்டலில் உள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நெகட்டிவ் முடிவு வந்தவர்கள் மட்டுமே அணியுடன் வேலை செய்ய முடியும். மிகவும் ஆரோக்கியமான ஊழியர்கள் மட்டுமே பணியில் அமர்த்தப்படுவார்கள் என்பதை அணியிடம் எடுத்துரைப்போம் என டோக்கியோவின் மேற்கு நகரான ஹமாமட்சுவின் சுகாதார மற்றும் விளையாட்டுக்கான அதிகாரி தெரிவித்தார். பிரேசில் ஜூடோ அணி வருகிற சனிக்கிழமை ஜப்பான் சென்றடைகிறது.

கடந்த 10-ந்தேதி ரஷியாவின் ரக்பி செவன்ஸ் அணி ஜப்பான் சென்றடைந்தது. இந்த நிலையில் அந்த அணியின் ஸ்டாஃப் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் அணியின் மற்ற ஸ்டாஃப்கள், வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இன்று கொரோனா பரிசோதனை செய்யப்படும். அதில் வீரர்களுக்கு நெகட்டிவ் முடிவு வந்தால், பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.