Tamilசெய்திகள்

கள்ளச்சாராயத்தால் 22 பேர் பலி – கவர்னரை சந்திக்க அதிமுகவினர் முடிவு

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி மீது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கவர்னர் மாளிகைக்கு ஊர்வலமாக சென்று மனு கொடுக்க உள்ளார். அ.தி.மு.க. மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

கூட்டத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள், அமைப்புச் செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் கட்சி வளர்ச்சிப் பணிகள், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மதுரையில் ஆகஸ்டு 20-ந்தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. பொன்விழா மாநாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக பேசப்பட்டது.

அதன்பிறகு தி.மு.க. ஆட்சியின் 2 ஆண்டு கால அவல நிலை குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. தி.மு.க.வின் அத்துமீறல்கள், முறைகேடுகளை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ரூ.30 ஆயிரம் கோடி சொத்து குவிப்பு ஆடியோ பற்றி மக்கள் மத்தியில் எடுத்துச்சொல்ல வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் பகுதியில் விஷ சாராயம் குடித்து 22 பேர் பலியான சம்பவத்தின் பின்னணியை தி.மு.க. அரசு மறைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். விஷ சாராய பலி குறித்து அவர் பேசியதாவது:-

விஷ சாராயம் குடித்தவர்களில் 62 பேர் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 15 பேர்களுக்கு கண்பார்வை பாதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு தி.மு.க. ஆட்சியின் செயல்பாடுதான் காரணம். ஆளும் கட்சி துணையுடன் கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது. இந்த விஷயத்தில் கள்ளச்சாராயத்தை தடுக்க தி.மு.க. அரசு தவறி விட்டது. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது. சட்டசபையில் நான் இதுபற்றி பேசியதற்கு கூட முதலமைச்சரிடம் இருந்து விளக்கமான பதில் வரவில்லை. எதிர்க்கட்சி தலைவர் கேட்ட கேள்விகளுக்கு சரியான பதில் சொல்லக் கூடாது என்பதற்காக பல்வேறு தகவல்களை முதலமைச்சர் மறைத்து விட்டார்.

அ.தி.மு.க. ஆட்சியில் கள்ளச்சாராயம் காய்ச்ச வியாபாரிகள் பயந்தார்கள். தி.மு.க. ஆட்சியில் அந்த பயம் யாருக்குமே இல்லை. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது. இப்போது இந்த வழக்கை திசை திருப்ப அரசு முயற்சி செய்கிறது. எனவே நாம் இந்த விஷயத்தை விடக்கூடாது. கவர்னரை சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளோம். தி.மு.க.வின் ஊழல்களையும் பட்டியலிடுவோம். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார். கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து தி.மு.க. ஆட்சி மீது புகார் கூறவும், விஷ சாராயத்துக்கு 22 பேர் பலியான சம்பவத்தின் பின்னணி பற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கவர்னர் மாளிகைக்கு வருகிற திங்கட்கிழமை (22-ந்தேதி) காலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சைதாப்பேட்டை கோர்ட்டு அருகே இருந்து ஊர்வலமாக சென்று மனு கொடுக்கிறார்கள். இதில் தலைமைக்கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்பது என்றும் எடப்பாடி பழனிசாமி உள்பட முன்னாள் அமைச்சர்கள் மட்டும் கவர்னரை சந்தித்து தி.மு.க. ஆட்சி மீது புகார் கூறி மனு கொடுப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி கவர்னர் மாளிகையிலும், போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் அனுமதி கேட்டு மனு கொடுக்கப்பட்டு உள்ளது.