Tamilசெய்திகள்

காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி இடையே 5 மாநிலங்களுக்கான தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட்டது

இந்தியா கூட்டணியில் காங்கிரஸ்- ஆம்ஆத்மி கட்சிகள் உள்ளன. இந்த கட்சிகளுக்கு இடையில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சுமார் ஒரு மாதமாக நடைபெற்று வந்தது. ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

பஞ்சாப் மாநிலத்தில் இரு கட்சிகளும் தனித்தனியே போட்டியிட முடிவு செய்யப்பட்டது. டெல்லி, குஜராத், அரியானா, சண்டிகர், கோவா மாநிலங்களில் போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் இன்று தொகுதி பங்கீடு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. மேலும், எந்தெந்த தொகுதிகள் என்பதையும் இரு கட்சிகளும் அறிவித்துள்ளன.

அதன்படி டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளில் நான்கில் ஆம் ஆத்மி போட்டியிடும். 3 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும். மேற்கு டெல்லி, தெற்கு டெல்லி, கிழக்கு டெல்லி, நியூ டெல்லி ஆகிய நான்கு தொகுதிகளில் ஆம் ஆத்மி போட்டியிடும். வடகிழக்கு டெல்லி, வடமேற்கு டெல்லி, சாந்த்னி சவுக் ஆகிய மூன்று தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும்.

குஜராத்தில் உள்ள 26 இடங்களில் 24 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடும். இரண்டு இடங்களில் ஆம் ஆத்மி போட்டியிடும் (பரூச், பவ்நகர் தொகுதிகள்). அரியானாவில் உள்ள 10 தொகுதிகளில் காங்கிரஸ் 9 இடங்களில் போட்டியிடும். ஆம் ஆத்மி ஒரு இடத்தில் (குருஷேத்ரா) போட்டியிடும். சண்டிகரில் உள்ள ஒரு இடத்தில் காங்கிரஸ் போட்டியிடம். கோவாவில் உள்ள இரண்டு இடங்களிலும் காங்கிரஸ் போட்டியிடும். இவ்வாறு காங்கிரஸ்- ஆம் ஆத்மி கட்சிகள் அறிவித்துள்ளன.