Tamilசெய்திகள்

கேட் திறக்க காலதாமதம் ஆனதால் சுங்கச்சாவடி ஊழியர் அடித்துக் கொலை – கர்நாடகாவில் பரபரப்பு

கர்நாடக மாநிலம் ராமநகரம் மாவட்டத்தின் பிடாடி நகரில் உள்ள சுங்கச்சாவடியில் நேற்று இரவில் திடீரென மோதல் ஏற்பட்டது. மைசூர் நோக்கி சென்ற ஒரு காரில் பயணித்த 4 நபர்கள், சுங்கச்சாவடியை நெருங்கியபோது, சுங்கச்சாவடியின் பூம் பேரியர் கேட் திறக்க தாமதம் ஆனது.

இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும் சுங்சச்சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சுங்கச்சாவடி ஊழியர் பவன் குமார் (வயது 26) கொல்லப்பட்டார். மற்றொரு ஊழியர் மஞ்சுநாத் பலத்த காயமடைந்தார்.

இதுதொடர்பாக பிடாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ ஆதாரத்தை வைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். மோதலில் ஈடுபட்டவர்கள் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

முதலில் இரவு 10 மணியளவில் சுங்கச்சாவடியில் மோதல் ஏற்பட்ட நிலையில், உள்ளூரைச் சேர்ந்தவர்கள் சிலர் அங்கு வந்து இரு தரப்பினரையும் விலக்கி விட்டுள்ளனர். இதனால் சண்டை முடிவுக்கு வந்தது. அதன்பிறகு காரில் வந்தவர்கள் சற்று தொலைவில் வாகனத்தை நிறுத்திவிட்டு, இரவு 12 மணியளவில் சுங்கச்சாவடி ஊழியர்கள் பவன் குமார், மஞ்சுநாத் இருவரும் சாப்பிடுவதற்காக வெளியே வந்தபோது ஹாக்கி மட்டைகளால் கடுமையாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.