Tamilசெய்திகள்

சட்டசபையில் விஜயகாந்த் நாக்கை துருத்தியதே தேமுதிகவின் வீச்சிக்கு காரணம் – அதிமுக எம்.எல்.ஏ

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வுடன் தே.மு.திக. பேச்சு வார்த்தை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது சட்டசபையில் ஜெயலலிதாவை எதிர்த்து குரல் எழுப்பியவர் விஜயகாந்த் என்றும் அ.தி.மு.க. கூட்டணியில் இல்லாததால் அக்கட்சியை சேர்ந்த 37 எம்.பி.க்கள் இருந்தும் நல்ல திட்டங்கள் கிடைக்காமல் போய் விட்டது எனவும் குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் சூலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜ் இன்று கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

37 எம்.பி.க்களால் பலனில்லை என்று பிரேமலதா சொல்வது அந்தம்மாவோட சொந்த கருத்து. தே.மு.தி.க. கட்சியை தமிழ்நாடே பார்க்கின்றது. இங்கொன்றும் அங்கொன்றும் என தே.மு.தி.க. இரு பக்கமும் பேசுகின்றது.

தே.மு.தி.க. இரு கட்சிகளுடனும் பேசுவது மிகப்பெரிய தவறு. நாகரீகம் தெரியாமல் சட்டசபையில் ஜெயலலிதாவை எதிர்த்து விஜயகாந்த் நாக்கை துருத்தியதே தே.மு.தி.க. வீழ்ச்சிக்கு காரணம். அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி வைத்தால் அதன் மூலம் அ.தி.மு.க.விற்கு ஒரு 500,1000 ஓட்டு கிடைக்கும். அது எங்களுக்கு நல்லது தானே. 500 வாக்குகள் வைத்திருக்கும் ம.தி.மு.க.வுடன் தி.மு.க. கூட்டணி வைத்திருக்கும் போது நாங்கள் தே.மு.தி.க.வுடன் கூட்டணி வைத்தால் என்ன தப்பு? ஜெயலலிதா ஆட்சி சூப்பர். எடப்பாடி பழனிசாமி ஆட்சியோ சூப்பரோ சூப்பர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *