Tamilசெய்திகள்

சிவராத்திரியை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, சுவாமி, அம்பாள் வீதி உலா மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

திருவிழாவின் 8-வது நாள் நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு காலை 9 மணிக்கு நடராஜர் கேடயத்தில் புறப்பாடாகி வீதி உலா நடைபெற்றது. இதனை தொடர்ந்து, இரவு 9 மணிக்கு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் வெள்ளி தேரில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. மேலும் சிவராத்திரியை முன்னிட்டு விடிய விடிய கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதனைதொடர்ந்து, இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்பாள் எழுந்த ருளினர். கிழக்கு ராஜ கோபுரம் பகுதியில் இருந்து தேரோட்டம் நடந்தது. சிவ கோஷத்துடன் பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளிலும் ஆடி, அசைந்து வந்த தேரை பக்தி பரவசத்துடன் கண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேரோட்டத்தை முன்னி ட்டு கோவில் மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது. நான்கு ரத வீதிகளிலும் இன்று காலை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.