Tamilசெய்திகள்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வாக்காளர்களின் வாக்காளர் பட்டியல் வெளியீடு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட கலெக்டர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆகியோரால் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 சட்டசபை தொகுதிகளில் உள்ள 200 வார்டுகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் மற்றும் வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் வெளியிடப்பட்டது. தொடர்ந்து பல்வேறு கட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற்று, வாக்காளர்களின் பெயர், முகவரி உள்ளிட்டவைகளில் திருத்தம் செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளில் உள்ள வாக்காளர்களின் புகைப்படங்கள் அடங்கிய வாக்காளர் பட்டியலை சென்னை ரிப்பன் மாளிகையில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், சென்னை மாநகராட்சி கமிஷனருமான ககன்தீப் சிங் பேடி நேற்று வெளியிட்டார்.

இந்த புகைப்பட வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 30 லட்சத்து 23 ஆயிரத்து 803 ஆண் வாக்காளர்கள், 30 லட்சத்து 93 ஆயிரத்து 355 பெண் வாக்காளர்கள், 3-ம் பாலினத்தவர்கள் 1,576 என மொத்தம் 61 லட்சத்து 18 ஆயிரத்து 734 வாக்காளர்கள் உள்ளனர்.

அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலம் 137-வது வார்டில் 58 ஆயிரத்து 620 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக ஆலந்தூர் மண்டலம் 159-வது வார்டில் 3 ஆயிரத்து 116 வாக்காளர்களும் உள்ளனர்.

இந்த புகைப்பட வாக்காளர் பட்டியல் மாநகராட்சியின் 200 வார்டு அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும். இந்த பட்டியலில் வாக்காளர் தங்களது விவரங்களை சரிபார்த்துக்கொள்ளுமாறு தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.