Tamilவிளையாட்டு

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் – நியூசிலாந்திடம் தோல்வியுற்று இலங்கை வெளியேறியது

16 அணிகள் பங்கேற்றுள்ள 13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் போட்செப்ஸ்ட்ரூமில் நேற்று நடந்த ‘டி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் ஆப்கானிஸ்தான் அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 6 விக்கெட்டுக்கு 265 ரன்கள் சேர்த்தது. இப்ராஹிம் ஜட்ரன் (87 ரன்), ரமனுல்லா (81 ரன்) அரைசதம் அடித்தனர். தொடர்ந்து ஆடிய ஐக்கிய அரபு அமீரகம் 32.4 ஓவர்களில் 105 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் 160 ரன்கள் வித்தியாசத்தில் 2-வது வெற்றியை பெற்ற ஆப்கானிஸ்தான் அணி கால்இறுதிக்கு தகுதி பெற்றது. சுழற்பந்து வீச்சாளர் ஷபியுல்லா கபாரி 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் கனடாவை புரட்டியெடுத்து அடுத்த சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.

‘ஏ’ பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் இலங்கை அணி நிர்ணயித்த 243 ரன்கள் இலக்கை நியூசிலாந்து அணி 49.5 ஓவர்களில் எட்டிப்பிடித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி 2 பந்தில் வெற்றிக்கு 6 ரன் தேவைப்பட்ட போது, நியூசிலாந்து வீரர் கிறிஸ்டியன் கிளார்க் (9 ரன்), 5-வது பந்தை சிக்சருக்கு விரட்டி பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தொடர்ந்து 2-வது தோல்வியை தழுவிய இலங்கை அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.

‘சி’ பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி 2-வது வெற்றியோடு கால்இறுதியை உறுதி செய்தது. இந்த பிரிவில் வங்காளதேமும் (4 புள்ளி) ஏற்கனவே கால்இறுதியை எட்டி விட்டது. 2-வது தோல்வியை சந்தித்த ஜிம்பாப்வே அடுத்த சுற்று வாய்ப்பை பறிகொடுத்தது.

இன்றைய லீக் ஆட்டங்களில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து, நைஜீரியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *