Tamilசெய்திகள்

ஜூலை 17 ஆம் தேதி நீட் தேர்வு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வரும் ஜூலை 17 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நாளை மறுநாள் (ஏப்ரல் 2-ம் தேதி) முதல் மே 7-ம்தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற உள்ளது. மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் தேர்வு கட்டாயமாக உள்ளது.

கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நீட் தேர்விற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவை ஜனாதிபதி நிராகரித்தார்.

இந்தநிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து கடந்த ஆண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பதவிக்கு வந்ததும் சட்டசபையில் மீண்டும் நீட் தேர்விற்கு எதிராக மசோதா நிறைவேற்றி தமிழக கவர்னக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து நீட் தேர்வு மசோதா மீது விரைவாக நடவடிக்கை எடுத்து ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்க வலியுறுத்தினார்.

அதனை தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்கக் கோரும் மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதாக கவர்னர் உறுதி அளித்துள்ளார்.