Tamilசெய்திகள்

டெல்லியில் திடீர் கொரோனா பரவல் அதிகரிப்பு – 325 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

நாடு முழுவதும் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த நிலையில், டெல்லி மற்றும் அரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக டெல்லியில் கடந்த திங்கட்கிழமை பாதிப்பு 137 ஆக இருந்தது. பின்னர் தொடர்ந்து உயர்ந்து நேற்று 325 ஆக அதிகரித்துள்ளது.

இது கடந்த 42 நாட்களில் இல்லாத அளவில் தினசரி பாதிப்பில் அதிகம் ஆகும். குறிப்பாக தெற்கு டெல்லி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 2 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் 8 மாணவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்களின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். பள்ளிகளில் மீண்டும் தொற்று பரவுவதால் வழிகாட்டு நெறிமுறைகளை டெல்லி அரசு வெளியிட்டுள்ளது.

அதில் தொற்று கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பள்ளிகளை உடனடியாக மூட வேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுறுத்தல்கள் கூறப்பட்டுள்ளது.

அரியானாவில் தொற்று பாதிப்பு படிப்படியாக உயர்ந்து நேற்று 170 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் 103 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

இம்மாநிலங்களையும் சேர்த்து இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 949 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதில் கேரளாவில் புதிய பாதிப்பு விபரம் தெரிவிக்கப்படவில்லை. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 39 ஆயிரத்து 972 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பு காரணமாக நேற்று மகாராஷ்டிராவில் மட்டும் 5 பேர், மிசோரத்தில் ஒருவர் என 6 பேர் இறந்துள்ளனர்.

நாட்டில் இதுவரை தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,21,743 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்புக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 810 பேர் நேற்று குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 7 ஆயிரத்து 38 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 11,191 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பை விட குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்து வந்தது. ஆனால் தற்போது புதிய நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் நேற்று 6,66,660 டோஸ்களும், இதுவரை 186 கோடியே 30 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி, இதுவரை 83.11 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று 3,67,213 மாதிரிகள் அடங்கும்.