Tamilவிளையாட்டு

டோனியின் கேப்டன்ஷிப்புக்கு 4 மதிப்பெண்கள் கொடுத்த சேவாக்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இமாலய இலக்கை நோக்கி ஆடிய போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி 7-வது வரிசையில் பேட்டிங் செய்தது பெரும் விவாதத்திற்குள்ளாகி இருக்கிறது.

இது குறித்து இந்திய முன்னாள் வீரர் ஷேவாக் கூறுகையில், ‘கடைசி ஓவரில் டோனி விளாசிய 3 சிக்சர் சென்னை அணி இலக்கை நெருங்கியது போன்ற எண்ணத்தை தோற்றுவிக்கலாம். உண்மை என்னவென்றால், டோனி நடுவில் இலக்கை விரட்ட கூட முயற்சிக்கவில்லை என்பது தான்.

இதற்கு அவர் (முதல் 13 பந்தில் 10 ரன் எடுத்த டோனி அடுத்த 4 பந்தில் 19 ரன் சேர்த்தார்) பந்துகளை அடிக்காமல் விரயம் செய்ததே சான்று. அவர் முன்வரிசையில் இறங்கியிருக்க வேண்டும். மிடில் ஓவர்களில் ரன்ரேட் வெகுவாக தளர்ந்து விட்டது. ஒரு வேளை அப்படி ரன்ரேட் குறையாமல் கடைசி ஓவரில் 20-22 ரன்கள் தேவையாக இருந்து, அந்த சமயத்தில் டோனி 3 சிக்சர் அடிக்கிறார் என்றால், ‘வாவ்… அற்புதமான நிறைவு’ என்று மக்கள் பாராட்டியிருப்பார்கள்.

பீல்டிங்கின் போது கூட டோனியின் சில முடிவுகள் விசித்திரமாகவே இருந்தது. சுழற்பந்து வீச்சாளர்கள் ஜடேஜா, பியுஷ் சாவ்லா ரன்களை வாரி வழங்கிய போதும், அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்தார். இந்த ஆட்டத்தை பொறுத்தவரை டோனியின் கேப்டன்ஷிப்பை மதிப்பிட சொன்னால், 10-க்கு 4 மதிப்பெண் தான் வழங்குவேன்’ என்றார்.