Tamilசெய்திகள்

தமிழகத்தில் இன்று கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் – தொமுச நிர்வாகி அறிவிப்பு

பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு, பெட்ரோல்-டீசல் மற்றும் விலையேற்றம் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தும், மத்திய அரசின் கொள்கைகளைக் கண்டித்தும் பல்வேறு தொழிற்சங்கங்கள் நேற்று நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கின. நாளையும் தொடர்ந்து போராட்டம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தொழிற்சங்கங்கள், அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறை தொழிலாளர்கள் பெருமளவில் போராட்டத்தில் இறங்கியதால் இயல்பை விட பாதிப்பு அதிகமாக இருந்தது. அரசு போக்குவரத்து கழகத்தின் பெரும்பாலான டிரைவர், கண்டக்டர்கள் இன்று பணிக்கு வராததால் தமிழகம் முழுவதும் சுமார் 70 சதவீத பஸ்களை இயக்க முடியவில்லை.

இதனிடையே, போராட்டம்தொடர்ந்தாலும் 60 சதவீத அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தொமுச பொருளாளர் நடராஜன் அறிவித்துள்ளார். முன்னணி நிர்வாகிகள் மட்டும் நாளைய போராட்டத்தில் கலந்துகொள்வார்கள் என தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை தெரிவித்துள்ளது.

பணிகள் பாதிக்காமல் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் எனவும் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.