Tamilசெய்திகள்

தமிழகத்தில் நெல் கொள்முதல் செப்டம்பர் மாதம் தொடங்கும் – மத்திய அரசு தகவல்

சம்பா பருவ சந்தை காலம் அக்டோபர் முதல் செப்டம்பர் வரை ஆகும். ஆனால் தமிழகத்தில் சம்பா பருவ சாகுபடியின்போது பருவமழையால் நெல் மூட்டைகள் சேதமடைய வாய்ப்பு உள்ளதால், விவசாயிகளின் நலன் கருதி முன்கூட்டியே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். குறிப்பாக, இந்த நெல் கொள்முதலை வழக்கமான அக்டோபர் மாதத்துக்கு பதிலாக ஒரு மாதத்துக்கு முன்கூட்டியே, அதாவது செப்டம்பரிலேயே தொடங்குமாறு அவர் பிரதமர் மோடிக்கு கடந்த ஜூன் 21-ந்தேதி கடிதம் எழுதினார்.

முதல்-அமைச்சரின் இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்று உள்ளது. இந்த அறிவிப்பை பாராளுமன்ற மாநிலங்களவையில் மத்திய வேளாண் துறை மந்திரி நரேந்திர சிங் வெளியிட்டார். இது தொடர்பாக உறுப்பினர்களின் கேள்விக்கு அவர் எழுத்து மூலம் அளித்த பதிலில், ‘தமிழகத்தில் நெல் கொள்முதலை ஒரு மாதம் முன்கூட்டியே அதாவது செப்டம்பர் மாதத்திலேயே தொடங்க அரசு ஒப்புதல் அளித்து உள்ளது’ என்று தெரிவித்தார்.

மத்திய அரசு 18.07.2022 தேதியிட்ட கடிதத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் விதைப்பு காலத்திற்கு முன்பே குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்படும் எனக்கூறிய நரேந்திர சிங் தோமர், இதனால் விவசாயிகள் ஒரு குறிப்பிட்ட பயிரை விதைப்பதற்கு முன்கூட்டியே முடிவை எடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.