Tamilசெய்திகள்

தீபாவளி பண்டிகைக்கு ஆவினில் ரூ.200 கோடிக்கு இனிப்புகள் விற்பனை செய்ய இலக்கு

பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் தீபாவளி-2022 பண்டிகையை முன்னிட்டு ஆவினில் சுவை மிகுந்த சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை குறித்த ஆய்வுக்கூட்டம் நடை பெற்றது. கடந்த ஆண்டு தீபாவளியை போலவே, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கும் கீழ்க்கண்ட சிறப்பு இனிப்புகள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டது.

காஜூ கட்லீ (250 கி) நட்டி அல்வா (250 கி) மோத்தி பாக் (250 கி) காஜு பிஸ்தாரோல் (250 கி) நெய் பாதுஷா (250 கி) இனிப்பு தொகுப்பு (500 கி) இதன் பொருட்டு தயாரிப்பு மற்றும் விற்பனை இலக்கு தொடர்பாக விரிவான ஆய்வினை அமைச்சர் சா.மு.நாசர் மேற்கொண்டார். தீபாவளி சிறப்பு இனிப்பு வகைகளை மிகுந்த சுவைமிக்கதாகவும் மற்றும் தரமாகவும் தயாரிக்க உத்தரவிட்டார்.

கருப்பட்டியை பயன்படுத்தி சுவையான இனிப்பு வகைகளை தயாரிக்கும் வழிவகைகளை ஆராயவும், விரைவில் விற்பனைக்கு அறிமுகபடுத்தவும் ஆலோசனை வழங்கினார். கடந்த ஆண்டு தீபாவளி சிறப்பு இனிப்புகள், நெய் மற்றும் பிற பொருட்கள் ரூ.82 கோடி அளவில் விற்பனை செய்யப்பட்டது.

இந்த ஆண்டு ரூ.200 கோடி வரை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு அதற்கான அனைத்து விற்பனை உத்திகளையும் கையாளவும், அரசு துறை அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள் , கூட்டுறவு நிறுவனங்கள், போக்குவரத்து துறை மற்றும் பிற நிறுவனங்களுக்கு தேவையான இனிப்பு வகைகளை வழங்க முன்கூட்டி திட்டமிட எடுத்துரைத்தார்.

பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தைகள், சாலை சந்திப்புகள், பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களை தேர்வு செய்து விற்பனை மேற்கொள்ள வலியுறுத்தினார். தீபாவளி சிறப்பு இனிப்பு வகைகளை ஏற்றுமதி செய்வதற்கான முகாந்தி ரங்களை ஆராயவும், தக்க அனுமதி மற்றும் தேவையான சான்றிதழ்களை பெறுவது குறித்தும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி ஜவஹர், பால்வளத்துறை ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சுப்பையன் மற்றும் ஆவின் உயர் அதிகாரிகள், அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

தீபாவளி சிறப்பு இனிப்பு வகைகளை பொதுமக்கள் ஆவின் பார்லர்கள் மற்றும் ஆவின் சில்லரை விற்பனையாளர்களிடமிருந்து வாங்கி பயன்பெற கீழ்க்கண்ட தொலைபேசியை தொடர்பு கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் தகவல்களுக்கு 18004253300 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

தங்களுக்கோ தங்களின் ஊழியர்களுக்கோ ஆயுத பூஜை மற்றும் தீபாவளிக்கு தேவையான தரமான முறையில் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகளை மேற்கண்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு மொத்தமாக பெற்றுக் கொள்ளலாம் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துக்கொள்கிறது. பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை பதிவு செய்ய ஆவினின் @AavinTn முகநூல், டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தலாம்.