Tamilசெய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.328 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் ரூ.16 கோடி மதிப்பில் அதிநவீன புற்றுநோய் சிகிச்சை கருவியை இயக்கி தொடங்கி வைத்தார். அங்கு ரூ.71 லட்சத்து 61 ஆயிரம் மதிப்பிலான ஆய்வக கட்டிடத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரத்துறை), பள்ளி கல்வித்துறை, போலீஸ் துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, மீன்வளத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் ரூ.22 கோடியே 37 லட்சம் மதிப்பிலான 16 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

பள்ளி கல்வித்துறை, வருவாய் பேரிடர் மற்றும் மேலாண்மைத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரத்துறை), நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வேளாண்மைத்துறை, மீன்வளத்துறை, தோட்டக்கலைத்துறை, போலீஸ் துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் ரூ.328 கோடியே 66 லட்சம் மதிப்பிலான 29 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி மற்றும் முக்கிய பிரமுகர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.